திருச்சியில் பெட்டிசன் மேளா- காவல் துறையின் புதிய முயற்சி!

திருச்சியில் பெட்டிசன் மேளா-  காவல் துறையின் புதிய முயற்சி!

திருச்சி மாநகர காவல் நிலையங்களில் ஏராளமான தீர்க்கப்படாத புகார்கள் இருந்து வருகிறது.அந்த புகார்களை விரைவாக தீர்க்கும் வகையில் புதிய முயற்சியினை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் மனு ரசீது மட்டும் வழங்கப்பட்ட காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள்,காவல் ஆணையர் அலுவலகங்களில் கொடுக்கப்படும் புகார்கள்,முதலமைச்சர் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட புகார்கள் ஆகிய புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் பெட்டிசன் மேளா எனப்படும்  பொது மக்கள் விசாரணை முகாமை இன்று தொடங்கி உள்ளனர்.

Advertisement

அதன்படி புகார் அளித்த மனுதாரர் எதிர்மனுதாரர் இரு தரப்பையும் நேரில் வரவழைத்து அவர்களுக்கான புகார்களை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 பெட்டிசன் மேளா திட்டம் இன்று தொடங்கியது. தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற முகாமில் கண்டோன்மெண்ட் காவல் நிலையம், செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் 20 புகார்கள் முதல்கட்டமாக தீர்க்கும் வகையில்  நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி அனைத்து புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய இந்த முகாம் வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதியில் நடைபெறும் எனவும் இது போன்ற முகாம்கள் மூலம் காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் தேங்குவதை தடுக்கலாம் அதே போல மக்களின் புகார்களுக்கு விரைவாக தீர்வு காண முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.