திருச்சியில் பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதற்கு எதிர்ப்பு- பாதுகாப்பிற்காக போலீசார் குவிப்பு!!

திருச்சியில் பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதற்கு   எதிர்ப்பு- பாதுகாப்பிற்காக போலீசார் குவிப்பு!!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் முன்பு பெரியாரின் சுயமரியாதை பிரச்சார அமைப்பின், திராவிடர் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி இனாம் குளத்தூரில் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்ட நிலையில், செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு கூண்டு அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

 இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோபுரத்தின் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத்தினர், மக்கள் அதிகாரம் மற்றும் காங்கிரஸ் அமைப்பினர் அப்பகுதியில் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். மாநகராட்சி சார்பில் சிலைக்கு கூண்டு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தங்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையை தாங்கள் பராமரித்து கொள்வோம்  என்றும் பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதால் சிலை மறைக்கப்படும் என்று தெரிவித்தும்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் ஆரோக்கியராஜ்...இது தங்களுக்கு சொந்தமான இடம் என்றும், அதற்கு தேவையான ஆவணங்களை தாங்கள் வைத்துள்ளதாகவும், தொடர்ந்து பெரியாரை பிடிக்காதவர்கள் அவரை அவமதிக்கும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதுகுறித்து நாளை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

Advertisement

தொடர்ந்து கூண்டு அமைப்பதற்காக போடப்பட்டிருந்த குழிகளை திராவிடர் கழகத்தினர் மண்ணைப் போட்டு மூடினர்.காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை நிறுத்தி வைப்பதாக தெரிவித்ததால் அப்பகுதியில் கூடியவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவியது. பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.