தென்னிந்தியாவின் சிறந்த தொழில்முறை விருது: திருச்சி பெண் சாதனை:

தென்னிந்தியாவின் சிறந்த தொழில்முறை விருது: திருச்சி பெண் சாதனை:

உலகில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அடுப்படியில் முடக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து படைக்கும் சாதனைகள் பல.ஆண்களும் பெண்களும் சமூதாயம் என்ற அழகு கட்டிடத்தினைத் தாங்கிப் பிடிக்கும் பலமான தூண்களே!

விஜிலா ஜாஸ்மின்

பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்துக் காரைக்காலம்மையார் போன்றவர்களையும் நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் கற்றோரும் மற்றோரும் போற்றுகின்றனர். சாதனை பெண்களின் சரித்திரத்தில் இடம் பிடித்தார் நம் திருச்சி மங்கை விஜிலா ஜாஸ்மின்.

சொந்த ஊரான திருச்சியில் பிலோமினாள் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், காவேரி  கல்லூரியில் சமூக ஆர்வலர் படிப்பையும் அதில் தங்கப்பதக்கமும் மற்றும் MBA HR  படிப்பையும் பின்பு மார்க்கெட்டிங் படிப்பையும் ஐந்து வருடங்கள் மார்க்கெட்டிங் பணியை செய்துவந்தார்.மார்க்கெட்டிங் பணி தன்னுடைய வாழ்வில் நிறைய அனுபவங்களையும் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கின்ற புதினங்களையும் கற்றுக்கொடுத்தது. பின்பு திருமண வாழ்க்கைக்கு பிறகு மதுரையில் எட்டு வருடங்கள் பணியினையும் தற்போது டிவிஎஸ் நிறுவனத்தில் பணி புரிவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து 11 வருட உழைப்பு என்பது பெண்களுக்கு சாதாரணமல்ல. ஒருபுறம் தன்னுடைய வேலைகளையும் மறுபுறம் குடும்பங்களையும் இரண்டையும் சமநிலையில் வைத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி இவ்வளவு தூரம் வந்திருக்கிறார் இந்த சாதனைப் பெண்.

இந்தச் சமயத்தில்தான் தென்னிந்தியாவின் பெண்கள் விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கும்.


இதுகுறித்து விஜிலா ஜாஸ்மின் கூறும்போது…“இந்த விருதுக்கு லட்சக்கணக்கான பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது ஹைதராபாத் பெங்களூரு சென்னை  போன்ற பெரிய பெரிய நகரங்களில் இருந்து வந்திருக்கும் போது சிறிய நகராகிய எனக்கு கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஆகத்தான் இருந்தது‌. இறைவனுடைய அருளால் நான் இந்த விருதை பெற்றேன். நான் அங்கு செல்லும்போது கூட தமிழகத்தில் இருந்து மிக குறைவான பேர் தேர்வு பெற்றிருந்தன. மிகவும் பெருமையாக இருக்கிறது இது போல இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும். “புத்தியுள்ள ஸ்திரீ தான் தன்னுடைய வீட்டை கட்டுவாள்” என்ற பைபிள் வசனம் போல பெண்களாகிய நாம் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்” என்கிறார் சாதனைப்பெண்.