வாய்க்காலை ஆக்கிரமித்து தடுப்புச் சுவர் - வீடு மற்றும் பள்ளிகளை சூழ்ந்து நிற்கும் கழிவுநீர்!!

வாய்க்காலை ஆக்கிரமித்து தடுப்புச் சுவர் - வீடு மற்றும் பள்ளிகளை சூழ்ந்து நிற்கும் கழிவுநீர்!!

திருச்சி மாவட்டம் உய்யகொண்டான் திருமலை பகுதியில் உள்ள எம்.எம்.நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதுமட்டுமல்லாது இங்கு பள்ளியும் உள்ள நிலையில் இப்பகுதியிலுள்ள வாய்க்காலை ஆக்கிரமித்து தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. வாய்க்கால் உள்ள இடம் கோயிலுக்கு சொந்தமான இடமாகும். ஆனாலும் அந்த இடத்தை ஆக்கிரமித்து தகர சீட்டுகளைக் கொண்டு தடுப்புசுவர் அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், வாய்க்காலின் ஒரு பகுதி மண் வைத்து முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால் வாய்க்கால் வழியாக வடியும் மழை நீர் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது.

இதனால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கி உள்ளதால் விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதாகவும், கொசுத்தொல்லை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Advertisement