நாம் தினசரியாக உட்கொள்ளும் உணவு பாதுகாப்பானதா? அதனை உறுதி செய்வது எப்படிv

நாம் தினசரியாக உட்கொள்ளும் உணவு பாதுகாப்பானதா? அதனை உறுதி செய்வது எப்படிv

உணவு, உடை, உறைவிடம்.. இவை மூன்றும் தான் ஒரு மனிதனின் இன்றியமையாத அடிப்படை தேவைகள். இதில் முதன்மையானது உணவு. கருவில் தோன்றி கல்லறை செல்லும் வரை மனிதனுக்கு உயிர் ஆற்றலை வழங்கும் தன்மையுடைய ஒரே பொருள் உணவாகும்!

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என மணிமேகலை நூலில் கூட உணவை உயிரோடு ஒப்பிட்டு உணவின் முக்கியத்துவம் பறைசாற்றப்பட்டிருக்கும். நம் உடலுக்குள் சென்று உயிர் காக்கும் இந்த பொக்கிஷத்தின் பாதுகாப்பு தன்மையை உறுதிசெய்வது அவசியமான ஒன்று.

இன்று உலக உணவு பாதுகாப்பு தினம் . பாதுகாப்பான உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை. வீட்டு சமயற்கட்டில் தொடங்கி பெரிய உணவகங்கள் வரை பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்ட உணவை வழங்குவது மிக மிக முக்கியமான ஒன்று. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பல பொருட்களுக்கு காலாவதி தேதி என்பதே இல்லை. ஆனால் மூன்று வேலை ரசித்து சாப்பிடும் உணவிற்கு அது உண்டு. தரமற்ற உணவை உட்கொள்வதன் மூலம் உயிருக்கே ஆபத்து நிகழும் சூழ்நிலைகள் கூட ஏற்படலாம். அதனால், நாம் உட்கொள்ளும் உணவை மிகுந்த எச்சரிக்கையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.


மல்லிகை பூ இட்லி, சீரகச்சம்பா பிரியாணி, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, பரோட்டா சால்னா, கலக்கி, பஜ்ஜி மற்றும் வடையுடன் சூடான டி என உணவு வகைகளின் பெயர்களை அடுக்கும்போதே நம் நாக்கில் எச்சில் ஊறுதல்லவா? இப்படி விரும்பி வாங்கி ரசித்து சாப்பிடும் உணவு பாதுகாப்பாக இருத்தல் அவசியம் தானே?

photo credit : suryan fm

அனைத்து மக்களும் பாதுகாப்பு தன்மையுடைய உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் , உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தொடங்கி மக்கள் மத்தியில் உணவை சேர்க்கும் உணவகங்கள் வரை சில நெறிமுறைகளை பின்பற்றவேண்டிய கட்டாயத்தை நமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இது குறித்து, தனியார் நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு நிர்வாகியாக பணியாற்றிவரும் திருமதி ஷ்வேதா-விடம் நாம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், " உணவின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துவது அரசின் கடமை மட்டுமல்ல. நம் அனைவரது பொறுப்பு. உணவு பொருட்களை கடையில் வாங்கும் நுகர்வோர்கள் விழிப்புடன் எச்சரிக்கையோடு அவற்றை வாங்க வேண்டும்" என கூறினார்.

மேலும், packaged உணவுகளை வாங்கும் போதும் உணவகங்களில் சாப்பிடும் போதும், வீட்டில் சமைக்கும் போதும் உணவின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்�� எது போன்ற வழிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும் எனவும் நமக்கு விவரித்தார் ஷ்வேதா. அதனை "திருச்சி விஷன்" நேயர்களுக்கு கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது எங்களது கடமை.

packaged உணவு பொருட்கள்

packaged உணவுகளை வாங்கும் பொது நாம் கவனிக்க வேண்டியது என்ன?

  • உணவு பொருளில் தயாரிப்பாளரின் FSSAI உரிமம் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • காலாவதி தேதியை கட்டாயம் பார்க்க வேண்டும். காலாவதி தேதி நெருங்குவது போல் விற்கப்படும் பொருட்களை தவிர்க்கலாம்.
  • நாம் வாங்கும் பொருளின் மேல் உள்ள "ஒவ்வாமை லேபிள்-ஐ " பார்த்து நம் உடலுக்கு சேராதவை ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம். தேவையற்ற உடல் உபாதைகளை தடுக்க இது உதவும்.

நாம் விரும்பி சாப்பிடும் உணவகங்களில் கவனிக்க வேண்டியது என்ன?

  • உணவு சூடாக கொடுக்கப்பட வேண்டும். ஆறிப்போன உணவை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், 5-60 டிகிரி வெப்பநிலையில் உள்ள உணவுகள் கெட்டுப்போகும் தன்மையுடையவை.
  • சுகாதாரமற்ற முறையில் உணவகங்கள் இயங்கினால், அங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
  • உணவகங்களும் FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதனை வாடிக்கையாளர்கள் கண்ணிற்கு தெரியும் படி காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்.
  • ஒரு உணவகத்தில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பற்று இருந்தால், 9444042322 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.

வெளியே வாங்கும் உணவில் மட்டும் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துவது போதுமானதல்ல. நமது வீட்டிலும் கவனமாக இருக்க வேண்டும். சிறு அஜாக்கிரதையான செயல்கள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

வீட்டில் தயாரிக்கப்படும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

  • உணவை தயாரிப்பவர்கள் அவர்களது கைகளை நன்றாக சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • அதுமட்டும் போதாது. உணவு தயாரிக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
  • மூன்று நாட்கள் பழமையான உணவை உட்கொள்ள கூடாது.
  • பெரும்பாலான உணவு பொருட்களின் வெப்பநிலையை சரியாக கண்காணிக்க வேண்டும். பால் மற்றும் அதன் விளைபொருட்களை 4 டிகிரி வெப்பநிலைக்கு கீழ் உள்ள இடத்தில வைக்க வேண்டும். சாலட் போன்ற முழுமையாக வேகாத உணவுகளை அறை வெப்பநிலையில் (room temperature) அதிக நேரம் வைக்க கூடாது. பிரீசரில் வாய்த்த இறைச்சியை சமைப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்பு சமைக்கவும்.
  • IS 10500 தரமுள்ள குடிநீரை சமைப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.

இதுபோன்று எண்ணற்ற எச்சரிக்கைகளை நாம் அன்றாட வாழ்வில் கையாள வேண்டும். நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ பாதுகாப்பான சுகாதாரமான உணவு பெரும் பங்களிப்பு அளிக்கிறது என்பதை நாம் என்றும் மறக்க கூடாது.