30 நாட்கள் 30 ஆயிரம் சேவைகள் - உலக சாதனை படைக்க காத்திருக்கும் திருச்சி இளைஞர்கள்!

30 நாட்கள் 30 ஆயிரம் சேவைகள் - உலக சாதனை படைக்க காத்திருக்கும் திருச்சி இளைஞர்கள்!

"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது"

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் கட்டாயமாக தேவைப்படுகிறது "உதவி". உதவி தேவைப்படாத மனிதர்களும் இல்லை, உதவி செய்யாத ஆட்களும் இல்லை. நம் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு சின்னஞ்சிறு உதவிக்கூட பெரிய அளவில் மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கும். அந்த வகையில் திருச்சியை சேர்ந்த இளைஞர்கள் குழு மாற்றத்தை நோக்கி அடுத்த கட்டத்திற்கு எடுத்து வைக்கும் உலக சாதனை முயற்சி தான் இது. இது பற்றிய தொகுப்பை காண்போம்.

திருச்சியில் அக்னி சிறகுகள் என்னும் அமைப்பு 7 ஆண்டுகளாக தொடர்ந்து சமுதாயப் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக போக்குவரத்து நெரிசல், சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை கல்லூரிகள் பள்ளிகள் போன்ற இடங்களுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து திருச்சி மாநகரில் விழாக்காலங்களில் போக்குவரத்தை சரி செய்யவும் இவ்வமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் பலருக்கு நிவாரண பொருட்களை அளித்து நெகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறது இந்த அக்னி சிறகுகள் அமைப்பு. திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 700க்கும் மேற்பட்டோர் இந்த அமைப்பினை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இவர்களது சமூக பணியின் அடுத்த கட்டமாக வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு ஒரு டாஸ்க் என்கிற விதமாக ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு என முப்பது நாட்களில் முப்பது ஆயிரம் பேருக்கு அவர்களுக்கு தேவைப்படும் உதவிஇளை செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர்‌.

Advertisement

இதுகுறித்து அக்னி சிறகுகள் தலைவர் மகேந்திரனிடம் பேசினோம்…. "உருவான நீ மற்றவர்களை உருவாக்கு என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த பயணத்தை தொடங்குகிறோம்.நான் ஒரு செடி நட்டேன் என்றால் என்னைப் பார்த்து ஒரு பத்து பேர் செடி நட வேண்டும், நான் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாங்கள் இதுவரை செய்துக்கொண்டு இருந்தோம், தற்போது எங்களை பார்த்து மற்றவர்களும் இதை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த "சிறகுகள் 30" என்ற திட்டத்தை துவங்கி உள்ளோம். இதில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு டாஸ்க் வழங்கப்படும். அதாவது மரம் நடுதல், தெருவோர நாய்களுக்கு பிஸ்கட் வழங்குதல், உணவு வழங்குதல் என 30 நாளைக்கும் 30 டாஸ்குகளை செய்ய காத்திருக்கிறோம்.

இதில் ஒருவர் மரக்கன்று நட்டார் என்றால் அவர் மூலமாக 10 பேர் மரக்கன்று நடுவார்கள். அந்த 10 பேர் 100 ஆக மாற வாய்ப்புள்ளது. எங்கள் குழுவில் ஏற்கனவே 700 பேர் உள்ளோம் ஒரு நாளைக்கு 1000 பேர் வீதம் ஒரு சமூகப்பணியை செய்து அதனை எங்கள் முகநூல் பக்கத்திலும் வெளியிட உள்ளோம். சங்கிலித் தொடரில் உள்ளங்களை இணைத்து உதவிகள் செய்து உலக சாதனை படைக்க காத்திருக்கிறோம்" என்றார் புன்னகையுடன்.

அக்னி சிறகுகள் தலைவர் மகேந்திரன்

உதவிகள் என்ற ஒன்றை மட்டுமே இலக்காக வைத்து உள்ளங்களை இணைக்க காத்திருக்கும் திருச்சி இளைஞர்களுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.