பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்த 80 காவலர்கள்!! பணியிலிருந்து அதிரடியாக விடுவித்த திருச்சி சரக காவல் டிஐஜி!!

பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்த 80 காவலர்கள்!! பணியிலிருந்து அதிரடியாக விடுவித்த திருச்சி சரக காவல் டிஐஜி!!

இதில் 2 ஆய்வாளர்களும், 29 உதவி ஆய்வாளர்களும், 49 காவலர்களும் சேர்த்து மொத்தமாக 80 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம், வழக்கு விசாரணை, போக்குவரத்து ஒழுங்கு முறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் போது காவல்துறையினர் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து குற்றசாட்டுகள் வந்ததுள்ளனர்.

இதற்கிடையில் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வழக்கு சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது. அங்கு பணியாற்றிய அனைத்து காவலர்களும் மொத்தமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இதற்கு முன்னதாகவே திருச்சி சரகத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொதுமக்களை தரக்குறைவாக நடத்துவோர், தாக்குதலில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களை காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் சேகரிக்க ஆரம்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே இன்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்கு பொதுமக்களிடம் தவறாக நடந்து கொள்ளாமலும், அதுபோன்ற சமயங்களில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சிகளும் மேலும் பொதுமக்களை எவ்வாறு கையாளுவது குறித்த பயிற்சிகள் அடுத்த ஒரு மாதத்திற்கு இவர்களுக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவோ அல்லது விசாரணைக்காகவோ செல்லும்போது போலீசார் கடுமையாகவும், மரியாதை குறைவாகவும் பொதுமக்களிடம் நடந்து கொள்வதாக புகார்கள் வர பெற்றன.அதனடிப்படையில் இன்று முதல் கட்டமாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 17 பேர், புதுக்கோட்டையில் 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 21 பேர், கரூரில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 15 பேர், பெரம்பலூரில் 5 சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 பேர், அரியலூரில் 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 18 பேர் என மொத்தம் 80 பேர் சட்டம் மற்றும் ஒழுங்கு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாளை முதல் இவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே எஸ்.பி அலுவலகங்களில் மன நல ஆலோசகர், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் மூலம் சிபிடி பயிற்சி அளிக்கப்படும் என்றும், ஒவ்வொருக்கும் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அவர்கள் அதிலிருந்து மீண்டு வர தேவையான உதவிகள் செய்யவும், பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் விளக்கம் அளிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நல்ல முறையில் மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.