தொடரும் போராட்டம்: திணறும் திருச்சி!

தொடரும் போராட்டம்: திணறும் திருச்சி!

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 5000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்கம், அசாம் ,மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடியுரிமை சட்டத்தை நடைமுறை படுத்த கூடாது என்னும் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் இருந்து கோர்ட், வெஸ்டரி பள்ளி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கண்டன பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் குலாம் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,  வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொது செயலாளர் முகம்மது கண்டன உரையாற்றினார்.

பேரணியின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பேரணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.