பட்டாசுகளைக் குறைத்து பசுமை வளர்த்து தீபாவளியை கொண்டாடுவோம் -கோவை சதாசிவம் திருச்சியில் பேச்சு

பட்டாசுகளைக் குறைத்து பசுமை வளர்த்து தீபாவளியை கொண்டாடுவோம் -கோவை சதாசிவம் திருச்சியில் பேச்சு

திருச்சி M .A.M 'B' ஸ்கூல் மேலாண்மைக் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற ஆறாம் ஆண்டு  தொடக்க விழா மெய்நிகர் சந்திப்பில் நவ 11ம்‌தேதியன்று நடைபெற்றது. 

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சூழலியல் அறிஞர் கோவை சதாசிவம் கலந்து கொண்டு "பட்டாசுகளைக் குறைப்போம் பறவைகளைக் கொண்டாடுவோம்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் கல்லூரியின்  மேலாண்மைத் துறைத் தலைவர் திருமதி முனைவர் ஹேமலதா தலைமை ஏற்று வரவேற்புரையாற்றினார். ண்ணீர் அமைப்பு மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்ற உதவிப் பேராசிரியர் கனிமொழி நிகழ்வை ஒருங்கிணைத்தார். தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி. நீலமேகம் முன்னிலை வகித்தார். 

தண்ணீர் அமைப்பின் செயலாளர் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கோவை சதாசிவம் சிறப்புரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில் 

"பட்டாசுகளின் தீமைகளைப் பற்றி பேசினார். பட்டாசுகள் மத்தாப்புகள் மண்ணுக்கு மண்ணில் உள்ள நுண்ணுயிர் தொடங்கி அனைத்து உயிர்களுக்கும் உருவாக்கும் பெருந் தீமை நச்சுகள் நிறைந்தது.

வெடிச்சத்தம் வயதானவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் யாவர்க்கும் உடலிலும் மனதிலும் பெரும் தீமையை உருவாக்கும். கருக்கலைந்து போகக் கூடிய நிலையை வெடிச்சத்தம் உருவாக்கும். பறவைகள் வயதானவர்களுக்கு இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து இறப்பை உண்டாக்கும். காற்றில் ஒரு சதம் நச்சு அதிகரித்தலும் கொரோனா தொற்று அதிகரிக்கும். டெல்லி , ராஜஸ்தான், கர்னாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை உள்ளது. திருச்சி, சென்னை, தூத்துக்குடியில் பசுமைப் பட்டாசுகள் வெடிக்க அறிவுறுத் தப்பட்டு வெடிக்கு அரசு தடை விதித்துள்ள்ளது. மத்தாப்பில் இருந்து உதிரும் ரசாயணம் 15 நாள் வரை மண்ணில் நச்சுத்தன்மையுடன் இருக்கும். கொரோனா காலத்தில் காற்றும் ஆற்று நீரும் தூய்மை அடைந்துள்ளது. இயற்கையை சிதைத்த மனித குலம்தான் அச்சத்தில் உள்ளது. பறவைகளை மனிதர்கள் வளர்க்க தகுதியற்றவர்கள் .பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பறவைகள் மனிதர்களை நம்பி பிறக்கவில்லை. பறவைகளின்றி மனித குலம் வாழ இயலாது.

பறவைகளைக் கொண்டாட மரங்களை வீட்டைச் சுற்றிலும் பசுமை செடிகளை வளர்த்தால் பறவைகள் மகிழும் மண் வளம் பெருகும். பட்டாசுகள் செய்யும் தொழிலில் உள்ள 6 லட்சம் பேர் கைகளையும் விரல்களையும் உடல்களை, உயிர்களை இழப்பது அதிகரித்து வருகிறது. அத்தகைய நச்சு நிறைந்த தொழிலில் இருந்து அவர்கள் வெளியேற மாற்றுத் தொழிலை நாம் ஏற்படுத்திட வேண்டும். 6 லட்சம் பேர் வாழ்க்கைக்காக 7 கோடி பேர்கள் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். கொண்டாட்டம் என்பது நாமும் பல்லுயிர்களும் அமைதியாக சூழலுடன் இணைந்து வாழ்வதே ஆகும். பறவைகளுடன்  சேர்ந்து வாழ்வதே பண்டிகை ஆகும். பட்டாசுகளைக் குறைத்து பசுமை வளர்த்து பறவைகளைக் கொண்டாடுவோம்" என்றார். 

நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலாண்டு மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் மன்ற  ஒருங்கிணைப்பாளர் பேரா. கனிமொழி நன்றி கூறினார். 

மாணவி நாகஜோதி நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிறைவாக மாணவர்கள் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம் என உறுதி மொழி கூறினர்.