திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரம்:

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரம்:

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று காலை தரிசனம் தந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

உலகப்புகழ் பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் கடந்த 26.12.19ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதில் இன்று மோகினி அலங்காரம் எனும் நாச்சியார் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

மூலஸ்தானத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் (பெண் வேடம்) நம்பெருமாள் புறப்பட்டு வந்தார். இன்று மாலை 4 மணி வரை அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.பின்னர் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக் கொட்டார பிரகாரம் வழியாக கருட மண்டபத்தில் நம்பெருமாள் வீற்றிருப்பார். அதையடுத்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைவார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நாளை (06ம் தேதி ) காலை 4.45 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனையொட்டி 4000 மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும் திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, ஸ்ரீரங்கம் வரும் நகர மற்றும் புறநகர் பேருந்துகளை நிறுத்த நகருக்கு வெளியே ஆங்காங்கே தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.