விஜய்யின் தந்தை தொடங்கிய புதிய கட்சியின் தலைவர் ஆர்.கே.ராஜா-விற்கு போலிஸ் வலைவீச்சு

விஜய்யின் தந்தை தொடங்கிய புதிய கட்சியின் தலைவர் ஆர்.கே.ராஜா-விற்கு போலிஸ் வலைவீச்சு

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் "விஜய் மக்கள் இயக்கம்" என்கிற கட்சியை தொடங்கினார். அக்கட்சியை தேசிய கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் திருச்சியைச் சேர்ந்த ஆர்கே ராஜா என்கிற பத்மநாபனை தலைவராகக் கொண்டுபதிவு செய்யப்பட்டது. 

ஆனால் தந்தையின் இந்த அரசியல் நடவடிக்கையை  பிடிக்காத நடிகர் விஜய் 'தனக்கும் இந்த கட்சிக்கும் சம்மந்தம் இல்லை" என்று அறிவித்தார்.

இந்த சூழலில் கட்சியின் தலைவராக இருக்கும் பத்மநாபன் (எ) ராஜா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், ஆயிரம் பேரிடம் நிலம் வாங்கி தருவதில்  மோசடியில் ஈடுபட்டதாக பத்மநாபன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.  மேலும், அவர் சட்ட விரோதமாக 20கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் வாய்மொழியில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், சென்னை உயர் காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் ஆர்.கே.ராஜா-வை கைது செய்வதற்கு நேற்று முழுவதும் திருச்சி போலிஸ் தேடுதல் வேட்டை நடத்தினர். 

 பத்மநாபன் (எ) ஆர்கே ராஜா  தற்போது ஊரில் இல்லாததால், அவர் தலைமறைவாகி இருப்பதாகக் கூறி அவரது மைத்துனரை நேற்று (11.11.2020) இரவு சட்ட விரோதமாக காவல்துறையினர் அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், இன்று (12.11.2020) அதிகாலை  ஆர்.கே ராஜா-வின் மனைவி மற்றும் மாமனாரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் சின்னசாமி தலைமையிலான போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். 

இது குறித்து ஆர்.கே ராஜா-விடம் கேட்டபோது, 'வேண்டுமெனறே தன் மீது பொய் புகார்கள் பரப்பப்படுவதாக' கூறியுள்ளார். 

கட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே அதன் தலைவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.