இன்று மொழிப்போர் தியாகிகள் தினமாம்! திருச்சியில் மொழிப்போர் தியாகிகளின் அவல நிலை!

இன்று மொழிப்போர் தியாகிகள் தினமாம்! திருச்சியில் மொழிப்போர் தியாகிகளின் அவல நிலை!

நீங்களோ… நானோ, ஒரு 10 நாள்கள் தமிழ் மொழி பேசாத ஒரு நகரத்தினுள் விடப் படுவதாக வைத்துக்கொள்வோம். நமக்கோ, தமிழ் -ஆங்கிலம் தவிர்த்து ஏதும் தெரியாது. அங்கு இருப்பவர்களுக்கோ தமிழும் ஆங்கிலமும் தெரியாது. இந்த நிலையில், நீங்கள் அந்த நகரத்தில்தான் 10 நாள்களைக் கழிக்க வேண்டுமெனில், உங்களின் மனநிலை எப்படித் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

ஒருவேளை, இன்று நடக்கும் அரசுப் பணித் தேர்வில் நீங்கள் இந்தியில்தான் தேர்வெழுத வேண்டுமெனில், நீங்களோ… நானோ என்ன செய்திருப்போம்? வெறும் 10 நாள்களுக்கு மட்டுமல்ல, இனிவரும் நாளையெல்லாம் இந்தி மொழியோடுதான் கழிக்க வேண்டும் என்று திணிக்கப்பட்டபோது, `பள்ளிப்படிப்பில் இனி, உங்களின் தாய் மொழி கூடாது; இந்தி மட்டுமே’ என்று சொன்னபோது, இந்தி பேசாத அனைத்து இந்தியரும், ஒருகணம் இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாகவே நினைத்தனர். இந்தப் போராட்டமே ஜனவரி 25-ம் நாள் நினைவுகூரப்படும் மொழிப்போர் தியாகிகள் தினம்.

ஒரு மொழியின் மீதான காழ்ப்புஉணர்வினால் ஏற்பட்ட போராட்டமல்ல… திணிக்கப்பட்ட மொழியின் மீதான எதிர்ப்புஉணர்வு மட்டுமே! இது மொழிவெறி போராட்டமல்ல… தாய்மொழியை விட்டுக்கொடுக்க முடியா உரிமை வாழ்வுக்கான போராட்டம் மட்டுமே!
ஆனால் இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் மறைமுக திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.இந்த மொழிப்போர் தியாகிகளை போற்ற வேண்டாமா? இவர்களின் தியாகங்களை நினைவுகூற வேண்டாமா?

திருச்சியில் இருக்கும் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் பார்த்தால் இவர்கள் ஏன் இந்த தேவையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற ஆதங்க நிலையைத்தான் உண்டாக்குகிறது. மொழிப்போர் தினம் அன்று கூட குப்பைகளும் தூய்மைப்படுத்தபடாமலும் பராமரிக்கப்படாமல் இவர்களின் இடங்கள் குப்பை நிறைந்த இடங்களாக இருக்கின்றன.

தமிழுக்காக எத்தனையோ உயிர் தியாகங்களை செய்து திமுகவின் அண்ணா அவர்களின் போராட்ட நெருக்கடியில் தீக்குளிக்கும் எத்தனையோ இளைஞர்கள் உயிரை மாய்த்து இந்த மொழிப்போருக்கு தான். ஏன் ஒரு ஆட்சியையே மாற்றியமைத்து இன்றளவும் பிடிக்க முடியாத அளவில் வைத்து விட்டது இந்த மொழிப்போர். அதன் பிறகுதான் இந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் தோற்றம் என்றால் அது மிகையாகாது.

இத்தியாகிகள் அன்றே போராடாமல் இருந்திருந்தால் இன்று நாம் படிக்கும் தாய் வழி கல்வி இருந்திருக்குமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றுதான்! நம்முடைய வருங்கால வாழ்க்கைக்கு துணை புரிந்து அன்றே போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற தியாகிகளுக்கு நாம் செய்யும் நினைவு இதுதானா? மரியாதையும் இதுதானா?நாம் தியாகங்கள் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை செய்த மனிதர்களுக்காக இன்று ஒருநாள் யாகங்கள் செய்யலாமே!