“கெலோ இந்தியா” விளையாட்டில் கலக்கிய திருச்சி ஸ்டார்கள்!

“கெலோ இந்தியா” விளையாட்டில் கலக்கிய திருச்சி ஸ்டார்கள்!

இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியாவிலுள்ள விளையாட்டு வீரர்களை ஆரம்பப் புள்ளியில் இருந்து கண்டறிந்து அவர்களை விளையாட்டுத்துறையில் வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாகவும் கெலோ இந்தியா விளையாட்டு ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.சமீபத்தில் அசாமில் நடந்த கெலோ இந்தியா விளையாட்டில் திருச்சியை சேர்ந்த இருவர் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று வந்துள்ளனர். அவர்களை பற்றிய சிறப்பு தொகுப்பு இது!

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் கெவினா அஸ்வினி. ஹோலி கிராஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வரும் இவர் தான் சமீபத்தில் நடந்த கெலோ இந்தியா விளையாட்டில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அஸ்வினியின் தந்தை அண்ணாவி தேசிய விளையாட்டு வீரர் என்பதும் அவருடைய தாயார் ஞான சுகந்தி தான் இவருடைய பக்கபலமாக இருந்து இவ்வளவு தூரம் செல்வதற்கான பயிற்சியாளரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சி சாதனைப்பெண் கெவினா அஸ்வினி.


இதுகுறித்து கெவின் அஸ்வினி அவர்கள் கூறுகையில் “என்னுடைய அம்மாதான் என் பயிற்சியாளர். ஏற்கனவே இந்திய அளவில் ஜூனியர் பிரிவில் பல பரிசுகளை பெற்றுள்ளேன். அதில் இந்தியாவின் 10 இடங்களுக்குள் சிறந்த வீராங்கனையாக இருந்ததால் இந்த போட்டிக்கு தேர்வு பெற்றேன். 1.64 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றேன். வருங்காலங்களில் இந்தியாவிற்காகவும் தேசிய அளவில் ஒலிம்பிக்கிலும் சாதிக்க வேண்டும்” என்கிறார்” நம் திருச்சி சாதனைப்பெண்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வருபவர் கெய்லி வினிஸ்டர். இவருடைய பயிற்சியாளரும் சுகந்தி தான். இவர் மும்முறை தாண்டுதலில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதுகுறித்து வின்ஸ்டர் கூறுகையில்”சிறுவயதிலிருந்தே பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். என்னுடைய சொந்த ஊர் நாகர்கோயில்.ஏற்கனவே இந்திய அளவில் ஜூனியர் பிரிவில் 2 வெள்ளி பதக்கங்களை பெற்று உள்ளேன். மேலும் இந்திய அளவில் முதல் 10 வீரர்களில் ஒருவராக இருந்ததால் இப்போட்டியில் பங்கு பெற்றேன். 15.5 ஒரு மீட்டர் மும்முறை தாண்டி வெண்கல பதக்கத்தை வென்றேன். அடுத்ததாக சீனியர் பிரிவில் கலந்துகொண்டு இந்திய அளவிலும் ஒலிம்பிக்கிலும் கலந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என்கிறார் திருச்சி கெலோ இந்தியா விளையாட்டு வீரர்.

திருச்சி கெலோ இந்தியா விளையாட்டு வீரர் கெய்லி வினிஸ்டர்

இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமைகள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன. இவர்களில் அஸ்வினியின் பெற்றோர் ஊக்குவித்து இவ்வளவு தூரம் வெற்றிக்கனியை பறிப்பதற்கு பக்க பலமாக உதவியது போல ஒவ்வொரு பெற்றோர்களும் நம்முடைய பிள்ளைகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். வரும் காலங்களில் இந்தியாவின் பெயரை உலக அரங்கில் ஒலித்திட வழிவகை செய்யும் இந்த திருச்சியின் ஸ்டார்களுக்கு TRICHY VISION சார்பாக வாழ்த்துக்கள்.