பொங்கல் பண்டிகை மது விற்பனையில் திருச்சி முதலிடம்!

பொங்கல் பண்டிகை மது விற்பனையில் திருச்சி முதலிடம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.605 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதில் திருச்சி மண்டலத்தில் ரூ.143 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது.தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது.

இதன் மூலம் நாள் தோறும் ரூ.70 முதல் ரூ.80 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கிய பங்கை வகிக்கிறது. இதேபோல், சாதாரண நாட்களை தவிர தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற முக்கியமான விடுமுறை நாட்களில் விற்பனை அதிகரித்து காணப்படும். இதுபோன்ற விழா நாட்களில் மதுவிற்பனை அதிகரிக்கும் என்பதால் முன்பாகவே 10 முதல் 15 நாட்களுக்கு தேவையான மதுபான வகைகள் இருப்பு வைக்கப்படும்.

அதன்படி கடந்த 14, 15, 17 ஆகிய மூன்று நாட்களில் தமிழகத்தில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 14ம்தேதி போகிப் பண்டிகை அன்று ரூ.178 கோடிக்கும், 15ம்தேதி பொங்கல் பண்டிகை அன்று ரூ.253 கோடிக்கும், 17ம்தேதி காணும் பொங்கல் அன்று ரூ.174 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. மொத்தமாக ரூ.605 கோடி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் மது விற்பனை ஆகியுள்ளது.

குறிப்பாக திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ.143 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த மண்டலம் மது விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.