தொட்டியம் ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகளை வெளுத்து வாங்கிய ஒன்றியக் குழு தலைவர்,  து.தலைவர் - பரபரப்பு

தொட்டியம் ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகளை வெளுத்து வாங்கிய ஒன்றியக் குழு தலைவர்,  து.தலைவர் - பரபரப்பு

கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்யாமல் பில் எழுதுவதா? என ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தொட்டியம் ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகளை வெளுத்து வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் கூட்ட மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் புனிதராணி தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணை தலைவர் பாபு சத்தியமூர்த்தி, ஆணையர்கள் பால் அண்ணாதுரை, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய அலுவலக மேலாளர் அசோகன் தீர்மானங்களை வாசித்தார். அப்போது 10-வது தீர்மானமான ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பிட செப்டிக் டேங்க் சுத்தம் செய்ததாக ரூ49 ஆயிரத்து 807 செலவு செய்ததற்கு மன்ற ஒப்புதல் கோரப்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஒன்றிய குழு துணை தலைவர் பாபு சத்தியமூர்த்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள கழிப்பறைகளில் செப்டிக்டேங்குகளை திறக்காமல் எப்படி சுத்தம் செய்தீர்கள் ஸ்டிரா மூலம் உறிஞ்சி எடுத்தீர்களா? மேலும் பசுமை வீடுகள் ஒதுக்கீடு குறித்து எங்களிடம் ஆலோசிக்காமல் ஒர்க் ஆர்டர் எப்படி போடலாம் என கேட்டார். இதைக் கேட்ட அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல்  திணறினர்.

தவறான பில் எழுதி என்னிடம் கையெழுத்து கேட்காதீர்கள் கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் புனிதா ராணி அதிகாரிகளிடம் பேசினார்.

தொட்டியம் ஒன்றிய அலுவலகங்களில் உள்ள கழிப்பறைகளின் செப்டிக் டேங்க்குளை சுத்தம் செய்யப்பட்டதாக கூறி ரூ.49 ஆயிரத்து 807 பில் எழுதியதை ரத்து செய்து ஒன்றியக் குழுத் தலைவர் புனிதராணி கையெழுத்திட்டார்.

இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.