புதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்

புதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்

 

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், கருமலை, காரைப்பட்டி, ஆலம்பட்டி ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சாலைப்பணிகள், மரக்கன்றுகள் நடுதல், ஜல் ஜுவன் மின் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி, நாற்றாங்கால் உற்பத்தி போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. சிவராசு கடந்த இரண்டு தினங்களாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக,  மதுரை- துவரங்குறிச்சி சாலையில் காரைப்பட்டி முதல் வேலக்குறிச்சி வரை 2 கி.மீ தூரத்திற்கு ரூபாய் 44.52 இலட்சம்  மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அச்சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளதா என்று தார்சாலையில் குழிதோண்டி அதிரடியாக ஆய்வு செய்தார். மேலும் இப்பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.


 ஆய்வின் போது மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசபெருமாள், கிசன்சிங், உதவி பொறியாளர்கள் வடமலைக்குமார், அரங்கநாதன் அப்துல்ரகுமான் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும், ஆய்வுப்பணியின் தொடர்ச்சியாக ஆலம்பட்டி ஊராடசியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் வேம்பு, புளி போன்ற பல்வேறு மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்காக நவீன முறையில் நாற்றாங்கால் முறையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதையும், கருமலை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணியினையும், ஆலம்பட்டி ஊராட்சியில் பனைவிதைகள் நடும் பணி, கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஜல் ஜுவன் மின் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணி போன்ற பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.