ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு மேற்கொண்டார்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் திருச்சி பஞ்சப்பூரில் 2.4 மெகாவாட் திறன் கொண்ட தரைமட்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி 13.50 கோடி ரூபாய் செலவில் 13.75 ஏக்கரில் நடைப்பெற்று வருகிறது. அந்த பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் டிசம்பரில் முழுமையான பணிகள் நிறைவுற்று அடுத்தாண்டு ஜனவரி மாதம் இதன் செயல்பாடு தொடக்கி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதே போல புத்தூர் உய்யக்கொண்டான் கால்வாய் கரை பகுதிகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட அவர் அங்கு 17.56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் பூங்காக்களை பார்வையிட்டார். இதில் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் பூங்கா திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இறுதியாக 17.34 கோடி ரூபாய் செலவில் நடைப்பெற்று வரும் சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.அங்கு இரண்டு பேருந்து நிறுத்த தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இரண்டு தளங்களும் கட்டப்பட்டு வணிக வளாகமாகவும் செயல்பட உள்ளது.அதற்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் 30 கடைகள்,கழிப்பறை வசதிகள்,உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.தற்போது  அங்கு 67 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்தாண்டு ஏப்ரலில் பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்,நகர பொறியாளர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள், திட்ட ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.