கொரோனாவிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள சிறந்த ஆயுதம் முகக்கவசம் மட்டுமே - ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனாவிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள  சிறந்த ஆயுதம் முகக்கவசம் மட்டுமே - ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா
தடுப்பு நடவடிக்கை குறித்து கள ஆய்வு மேற்கொண்ட
பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,

"திருச்சி மாவட்டத்தில் 903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் நோய் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 5.96 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் முழுவதும் 8.50 சதவீதமாக உள்ளது .சேலம், கோயம்புத்தூர், தேனி கன்னியாகுமரி, கடலூர் உள்ள��ட்ட தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில்
தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போன்று 10 சதவீதத்திற்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் மாவட்டங்களில் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் பேசிய அவர், " நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவு சோதனை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி,மதுரை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1.79 லட்சம் படுக்கை வசதி யுள்ளது. 85 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கூட அதையும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி கொரோனா இறப்பில் தான் சேர்க்கிறோம்.அதனால் தான் கொரோனா மரணம் அதிகமாக தெரிகிறது" எனப் பேசினார்.

"தமிழகத்தில் பொதுமக்கள் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு தற்போது அனைவரும் முக கவசம் அணிந்து வருகிறார்கள். தடுப்பூசி வருவதற்கு இன்னும் காலம் இருப்பதால் அதற்குள் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சிறந்த ஆயுதமாக இருப்பது முக கவசம் என்று சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.தமிழ்நாட்டில் முககவசம் அணிபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும்" குறிப்பிட்டார்.

" இறப்பு விகிதத்தை குறைக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 3,500 வென்டிலேட்டர் கருவிகளும் திருச்சி மாவட்டத்தில் 136 வென்டிலேட்டர் கருவிகள் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதலாக கட்டணம் வசூலித்த இரண்டு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் 80 சதவீதம் சரியான முடிவு வருகிறது.ஒரு சிலருக்கு அந்த சோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்து சி.டி.ஸ்கேனில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது" எனக் கூறினார்