தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அள்ளிச் சென்ற அதிகாரிகள் - குடிநீர் தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் - திருச்சி அருகே பரபரப்பு!!

தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அள்ளிச் சென்ற அதிகாரிகள் - குடிநீர் தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் - திருச்சி அருகே பரபரப்பு!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா கொளக்குடி கிராமத்தில் 11 விநாயகர் சிலைகளை வருவாய்த் துறையினர் காவல் துறையினர் எடுத்து சென்றதை கண்டித்தும், சிலைகளை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைக்க வலியுறுத்தியும் இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொட்டியம் தாலுகா கொளக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வாங்கி வைக்கப்பட்டிருந்த 11 விநாயகர் சிலைகளை வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றுள்ளனர். இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கண்ணன், திருப்பதி ஆகியோர் கொளக்குடி கிராமத்தில் உள்ள சுமார் 50 அடி உயர மேல் நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று விநாயகர் சிலைகளை திரும்ப எடுத்த இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மேலும் குடிநீர் தொட்டி மீது யாரேனும் ஏறினால் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் முசிறி கோட்டாட்சியர் துரைமுருகன், காவல் துணை கண்காணிப்பாளர் பிரம்மானந்தம், தொட்டியம் வட்டாட்சியர் மலர் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் ஒலிபெருக்கி மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை வாகனத்துடன் மீட்புக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மீட்பதற்கான பணிகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

தொட்டியத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த சங்கர், விஸ்வநாதன், ஆனந்த், பரமேஸ்வரன், சுப்ரமணி , ராகுல் ரத்தினம் ஆகியோரும் தொட்டியம் பேருந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.