திருச்சியில் ஆடு திருடர்கள் 2 பேர் கைது - 66 ஆடுகள், ஒரு வேன் பறிமுதல்

திருச்சியில் ஆடு திருடர்கள் 2 பேர் கைது - 66 ஆடுகள், ஒரு வேன் பறிமுதல்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆடுகள் திருட்டுப் போவது குறித்து அதிகளவில் காவல் நிலையத்திற்கு புகார் வரத்தொடங்கியது. ஆடு திருடர்களை பிடிக்க திருச்சி சரக டிஐஜி தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிறுகனூர் அருகே திருப்பட்டூர் பகுதியில் ஆடுகளை திருடிவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஆடுகளை திருடி காரில் போட்டுக்கொண்டு அருகில் உள்ள சரக்கு வேனில் ஏற்றி கொண்டிருந்தனர். தனிப்படை போலீசாரை கண்டதும் காரில் இருந்த திருடர்கள் காரை் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சரக்கு வேனில் இருந்த 2 திருடர்களை பிடித்த தனிப்படை போலீசார் 66 ஆடுகள், கார் மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்து சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முள்ளிக்காம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ரெத்தினம் மகன் ராமராசு (32), அதே பகுதி நெப்புகை வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் டிரைவர் சந்திரசேகரன் (29) என தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சிறுகனூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகளை உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn