திருச்சியில் 450 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சிவாஜி நகர் ஆபிஸர் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஹான்ஸ், கூல் லீப், விமல் பாக்கு உள்ளிட்ட தடைசெய்யப்பட்டு உள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக துவாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடியாக அந்த வீட்டை சோதனையிட்டபோது குட்கா மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக துவாக்குடி போலீசார் திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வருண்குமார் நேரில் வந்து பார்வையிட்டதோடு உடனடியாக அனைத்தையும் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து துவாக்குடி போலீசார் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், ஸ்கூல் லீப் விமல் பாக்கு உள்ளிட்ட சுமார் 450 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு, இது சம்பந்தமாக வாழவந்தான் கோட்டை சிவாஜி நகர் ஆபிஸர் காலனி பகுதியை சேர்ந்த குணசேகர் (59), புதுக்கோட்டை கிள்ளுக்கோட்டையை சேர்ந்த ஐயப்பன் (57) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்துகடைகளில் விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்ததோடு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision