மிகுந்த மனவேதனையுடனும், உடனடி தலையீடு கோரும் அவசர வேண்டுகோளுடனும் நேற்று (28.07.2025) ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர், டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, ரஷ்யாவில், ரஷ்யா – உக்ரைன் போர்முனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை

பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதத்தை கொடுத்து அதுகுறித்து விளக்கம் அளித்தேன்.
தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், சிறுமுஷ்ணத்தைச் சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற இளம் மருத்துவ மாணவர் ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வருவதை சுட்டிக்காட்டி, அவரை ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்து, உக்ரைன் போர்முனைக்கு அனுப்பப்படும் ஆபத்தான நிலையில் உள்ளார் என்பதை ஆதாரங்களுடனும் மற்றும் அவரது கடவுச்சீட்டு நகல் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

கிஷோரின் பெற்றோர் தங்கள் மகனுக்கு ரஷ்யாவில் மருத்துவக் கல்வி கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கல்விக் கடன் பெற்ற எளிய குடும்பத்தினர். தாங்க முடியாத வேதனையுடன் கிஷோருடைய தாய் தந்தை இருவரும் கடந்த (26.07.2025) அன்று என்னைச் சந்தித்து கதறினர்; காலில் விழுந்தனர். அவர்கள் என் காலில் விழுவதை நான் பதறிபோய் தடுத்தேன். ஆனால் அவர்களது கண்ணீரை என்னால் தடுக்க முடியவில்லை.

07.05.2023 அன்று, கிஷோர் ரஷ்ய காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அவர்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன் பின் கிஷோர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகத்திற்கு அவர்கள் விடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 12.07.2025 அன்று, கிஷோர் தங்களை அலைபேசியில் அழைத்து, தான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாகவும், ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது கடவுச்சீட்டு மற்றும் ரஷ்ய அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தான் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வலுக்கட்டாயமாக இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு, சில நாட்களில் தன்னை போர்முனைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போருக்கு அனுப்பப்பட்டால் தான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று அவர் பெற்றோரிடம் கதறி அழுததாக கூறி, எங்கள் மகன் திரும்ப வராவிட்டால் தங்களுக்கும் வாழ விருப்பமில்லை என்று கூறியது என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இது மூன்று உயிர்களின் வாழ்வு தொடர்பான மிக முக்கியமான பிரச்சினையாகும்.
இது தனிப்பட்ட சம்பவம் அல்ல; தனிபட்ட நபருக்கான கோரிக்கை மட்டுமல்ல.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 17.01.2025 அறிக்கையின்படி, 126 இந்திய குடிமக்கள் ரஷ்யாவில் இராணுவ சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர், 16 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் அனைவரும் படிக்கவோ, உழைக்கவோ வெளிநாடு சென்றவர்கள்; இவர்கள் போரில் ஈடுபடவோ, தங்கள் இந்தியாவுக்கு சொந்தமில்லாத போரில் உயிரிழக்கவோ செல்லவில்லை. எந்தவொரு இறையாண்மை கொண்ட நாடும், குறிப்பாக மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு குடிமக்களுக்கு எதிராக இத்தகைய வற்புறுத்தல் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும் என்று விரிவாகவும் என் ஆழ்மன கவலையுடனும் தெரிவித்தேன்.

இந்தப் பிரச்சினையை ரஷ்ய அரசாங்கத்துடன் மிக உயர்ந்த தூதரக மட்டத்தில் எழுப்புமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன் என்றும், திரு. கிஷோர் சரவணன் உடனடியாக மீட்கப்பட்டு, தாமதமின்றி தாயகம் திரும்ப ஏற்பாடு செய்துதர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், இதேபோன்ற சூழ்நிலைகளில் சிக்கியுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் பாதுகாப்பாக மீட்டு வரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
மேலும், இத்தகைய கொடுமைகள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,

இந்த நேரத்தில் இந்தியாவின் மௌனமோ அல்லது செயலற்ற தன்மையோ, இந்தியா தன் சொந்த குடிமக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாக கருதப்படும் என்றும், மாண்புமிகு அமைச்சரிடம் எடுத்துரைத்து, இரு நாடுகளுக்காக மேல்மட்ட அளவில் இந்தப் பிரச்சனையை எடுத்துச்சென்று, துரித நடவடிக்கையில் ஈடுபட்டு, கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை ரஷ்யாவிலிருந்து மீட்டுக்கொண்டுவர தாங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வேதனையோடு கேட்டுக்கொண்டேன்.
எனது உள்ளத்தின் கவலையையும், பிரச்சனையின் தீவிரத்தையும் புரிந்துகொண்ட அமைச்சர் அவர்கள், என் முன்பாகவே உரிய உயர் அதிகாரிகளை அழைத்து பேசி, துரிதமாக செயல்படுமாறு கட்டளையிட்டதுடன் தமது நடவடிக்கையினை தொடங்கிவிட்டார்.

நேற்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அவையில் எடுத்துரைத்தேன்.விரைவில் கிஷோர் சரவணன் மற்றும் அனைத்து இந்தியர்களும் இந்தியா வந்தடைய வேண்டும். அதுதான் எமது ஒரே எதிர்ப்பார்ப்பாக உள்ளது. நம்புவோம், அது நடக்கும். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments