எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் ஊராட்சியில், பிசானத்தூர் கிராமத்தில், உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) தனியாரால் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆலை, புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டு, அருகில் உள்ள எட்டு மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அழிப்பதற்காக அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மருத்துவக் கழிவுகள் தெருவோரங்களிலும், குப்பைகளிலும் ஆங்காங்கே வீசப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். அந்தக் கழிவுகள் மண்ணிலும் நீர்நிலைகளிலும் கலந்து மனிதர்கள், கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலையும் பாதிக்கும்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நல்லெண்ணத்துடன்தான் இத்தகைய மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனாலும், இதுபோன்ற ஆலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளிலோ, விவசாய நிலங்கள் சூழ்ந்த பகுதிகளிலோ, நீர்நிலைகளுக்கு அருகிலோ அமைவது மிகவும் ஆபத்தானது என்பது உலகளாவிய சுற்றுச்சூழல் வல்லுநர்களின் எச்சரிக்கையாகும்.
துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆலை எனது தொகுதியில் உள்ள, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும், சுற்றிலும் விளைநிலங்களும் கொண்ட பகுதியாகவும், பல சுற்றுவட்டார கிராமக்களுக்கு நீராதாரமாக உள்ள பிசானத்தூர் கிராமத்தில் அமைக்கப்படவுள்ளது.
இந்த ஆலையில் ஒரு மணி நேரத்திற்கு 100 கிலோ கழிவை எரிக்கும் ஒரு அலகும், ஒரு மணி நேரத்திற்கு 200 கிலோ கழிவை எரியூட்டும் திறன் கொண்ட மற்றொரு அலகும் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதனால் 30 கிலோமீட்டர் சுற்றளவில் காற்று மாசுபாடும், நச்சுப்புகை மற்றும் வேதிப்பொருட்களோடு கூடிய புகை வெளியேற்றமும் ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய், நுரையீரல் தொற்று, தோல் நோய், பிற ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுவதோடு விவசாயம் உள்ளிட்ட அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயத்தை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி Effluent Treatment Plant (ETP), Continuous Emission Monitoring System (CEMS) போன்றவை அமைக்கப்படும் என்று உறுதியளித்தாலும், அதன் பராமரிப்பில் ஏற்படும் தவறுகள், மின்தடை, இயந்திரக் கோளாறு போன்றவை ஏற்பட்டால் இப்பகுதி மக்களின் உடல்நலனுக்கு பெரும் கேடு ஏற்படுத்தும் நிலை உருவாகும்.
எனவே, பொதுமக்கள், விவசாயிகள், குழந்தைகள், முதியோர் ஆகியோரின் நலனைக் கருத்தில்கொண்டு, இந்த மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலையை பிசானத்தூர் கிராமத்திலிருந்து மாற்றி, மக்கள் வசிக்காத, விவசாய நிலங்கள் இல்லாத, நீர்நிலைகளுக்கு அருகில் இல்லாத, நீராதாரங்கள் பாதிக்கப்படாத, மக்கள் பயன்பாடு அற்ற தரிசு நிலங்களைத் தேர்வுசெய்து, அந்த இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி, இப்பகுதி பொதுமக்கள், கடந்த 29 நாட்களாக அறவழியில் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்ட இடத்திற்கு இன்று (22.11.2025) காலை 9:30 மணியளவில் நேரில் சென்று, மக்களைச் சந்தித்து எனது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டேன்.
அப்போது பேசுகையில், இந்தப் பிரச்சனை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் “இவர்கள் என் மக்கள்; இது என் கிராமம்” என்ற உணர்வோடு உரையாற்றினேன்.
அப்போது, பொதுமக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு கருத்தை நான் தெளிவுபடுத்த விரும்பினேன். அதன் அடிப்படையில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற நாடாளுமன்ற நிலைக் குழுவில் உறுப்பினராக நான் அங்கம் வகித்தாலும், இது குறித்து ஒன்றிய அரசிடம் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதைத் தெளிவுபடுத்தினேன்.
இந்தப் பிரச்சனை மாநில அரசுக்கு உட்பட்டது என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அண்ணன் திரு. தங்கம் தென்னரசு அவர்களையும் சந்தித்து இது குறித்து எடுத்துரைப்பேன் என்று அவர்களிடம் உறுதியளித்தேன்.
மேலும், என் தொகுதியில் மட்டுமல்ல, மக்கள் வசிக்கும் எந்தப் பகுதியிலும் இந்த ஆலை அமைக்கக் கூடாது என்ற எனது நிலைப்பாட்டை மக்கள் முன் எடுத்துரைத்தேன்.
குறிப்பாக கந்தர்வகோட்டை பகுதிக்கு தொழிற்சாலைகளும் கல்வி நிலையங்களும் தேவையான நேரத்தில், வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இந்த மருத்துவக் கழிவுகளை எரியூட்டும் ஆலை அமைப்பது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பேசினேன்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ எந்தக் கட்சிக்கும் எதிராகவோ போராடவில்லை என்பதை குறிப்பிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவே அறவழியில் போராடுகின்றனர் என்பதை வலியுறுத்தி, மீண்டும் அவர்களின் போராட்டத்திற்கு எனது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டு விடைபெற்றேன்.
அதன்பிறகு, பகல் 12 மணியளவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து இதுகுறித்து மனு அளித்துள்ளேன்.
கூடிய விரைவில், தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களையும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களையும் நேரில் சந்தித்து, விரிவான கோரிக்கை மனுவுடன் வலியுறுத்த உள்ளேன்.
பசுமை கிராமமாகக் குடியரசுத் தலைவர் விருது பெற்ற இந்த பிசானத்தூர் கிராம மக்களின் உயிர், உடல்நலம், சுற்றுச்சூழல், விவசாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டி,
இந்த ஆலையை உடனடியாக மக்கள் பயன்பாடற்ற வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments