திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள பச்சாம் பேட்டையில் நூற்றாண்டு கண்ட முதல் உலகப்போர் நினைவுச் சின்னத்தில் முதல்கட்டமாக ரூபாய் 7 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. முதல் உலகப்போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாகவும், அதில் பங்கேற்ற இந்திய வீரர்கள் முக்கிய பங்காற்றியதை நினைவுகூரும் வகையிலும் திருச்சி லால்குடி சாலையில் வாளாடி அருகேயுள்ள பச்சாம் பேட்டையில் போர் நினைவுச் சின்னம் (பச்சாம்பேட்டை வளைவு) கட்டப்பட்டது.
திவான் பகதூர் ஜி.கிருஷ்ணமாச்சாரியார் கட்டிய இந்த நினைவுச் சின்னத்தை 10.8.1922 அன்று திவான் பகதூர் டி.தேசிகாச்சாரியார் திறந்து வைத்தார். பெரியவர் சிலி, மயிலரங்கம், பச்சாம்பேட்டை திருமணமேடு உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லக்கூடிய சாலையின் நுழைவுவாயிலாக கம்பீரமாக காட்சியளித்த இந்த நினைவுச் சின்னம் காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடையத் தொடங்கியது.
மேலும், நினைவுச் சின்ன வளைவின் கட்டுமானம் வலு விழந்ததால், அதிலிருந்த செங்கற்கள் ஒன்றன்பின் ஒன்றாக பெயர்ந்து விழுந்தன. வண்ணப்பூச்சுகள் மறைந்ததால் பொலிவிழந்து காணப்பட்டது. இந்தச் சூழலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நினைவுச்சின்னம் கடந்த ஆக.10-ம் தேதியன்று நூற்றாண்டு கண்டது. எனவே போர் வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் உடனடியாக இந்த வளைவைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, இந்த வளைவை ஆய்வு செய்து, சீரமைப் பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில், திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் பச்சாம்பேட்டைக்குச் சென்று போர் நினைவுச்சின்ன வளைவை ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, வலுவிழந்து காணப்படும் தூண்களை சிமென்ட் கட்டுமானம் மூலம் சீரமைப்பது, வளைவுக்கு வண்ணங்கள் பூசி மீண்டும் பொலிவுறச் செய்வது, வளைவு குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைப்பது என திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு இந்திய தொல்லியல் துறைக்கு திருச்சி மண்டல அலுவலகத்திலிருந்து பரிந்துரை செய்ய இந்திய தொல்லியல் துறை அறிவிக்பபட்டுள்ளது. மிக விரைவில் இதற்கான ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாப்பதற்கே தொல்லியல் துறை முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த நினைவு சின்னம் இன்னும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படவில்லை. எனினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாலும், எம்.பி திருச்சி சிவா பரிந்துரையின் பேரிலும் இதை சீரமைக்க இந்திய தொல்லியல் துறை முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண் ராஜிடம் கேட்டபோது, “நடப்பாண்டில் நூற்றாண்டு கண்டுள்ள இந்த நினைவுச் சின்னத்தில் முதற்கட்டமாக ரூபாய் 7 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளன” என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn



            
            
            
            
            
            
            
            
            
            


Comments