திருச்சி மாநகராட்சியில் அதிமுகவின் முதல் பெண் மேயர் ஜெயா இன்று(27.01.2022) மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருச்சி மாநகராட்சியானது முதல், காங்கிரஸ் ஆதிக்கத்தில் இருந்த மேயர் பதவி. 2011 - 2016ஆண்டு முதல் முறையாக திராவிட கட்சியான அ.தி.மு.க வசமாகியது. திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு, அ.தி.மு.க சார்பில் ஜெயா, தி.மு.க., சார்பில் விஜயா ஜெயராஜ், ம.தி.மு.க., சார்பில் டாக்டர் ரொஹையா, தே.மு.தி.க., சார்பில் வழக்கறிஞர் சித்ரா, காங்கிரஸ் சார்பில் விஜயா, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிரிஜா உட்பட 16 பேர் போட்டியிட்டனர்.
இறுதியாக, 21 சுற்றுகள் முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயா, 51 ஆயிரத்து 415 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம்,1996ல் மாநகராட்சி ஆனது முதல் 2010 வரை தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வகித்து வந்த மேயர் பதவியை, திராவிட கட்சியான, அ.தி.மு.கவைச் சேர்ந்த ஜெயா முதல் முறையாகப் பிடித்தார்.
திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முழு ஆதிக்கத்தில் இருந்தது திருச்சி மேயர் பதவி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதை கைப்பற்றியதன் மூலம், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயா புதிய சாதனை படைத்தார்.
இந்நிலையில் திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனி பகுதியில் ஜெயா(55) வசித்துவந்தார் இன்று அதிகாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய உடலுக்கு அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இறுதி சடங்குகள் மாலை நடைபெற்றது.