ஸ்ரீரங்கம் கோயிலில் கொரோனாவால் தடைபட்ட ஆதி பிரம்மா திருநாள் எனப்படும் பங்குனி திருவிழா - கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆதி பிரம்மா திருநாள் எனப்படும் பங்குனி தேர்த் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு சிறப்பு பூஜைகளுடன் அதிகாலை 4- மணிக்கு கொடியேற்றப்பட்டது.
இன்று முதல் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் கருட வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கருட மண்டபத்தில் காட்சி அளிப்பார். அங்கு நம்பெருமாளுக்கு பல்வேறு சேவைகள், பூஜைகளுக்குப் பின்னர் கண்ணாடி அறை சென்றடைவார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாயார் சேர்த்தி சேவை வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய இத்திருவிழா நடைபெறாத காரணத்தினால், அதற்கான பரிகார ஹோமங்கள், சகஸ்ர கலசா அபிஷேகம் செய்யப்பட்டு, விட்டுப் போன பிரமோற்சவங்களை நடத்திட வேண்டும் என்ற ஆகம விதிப்படி இன்று தொடங்கி பத்து நாட்கள் கோயில் வளாகத்தினுள் நடைபெற உள்ளது.144 தடை உத்தரவு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திருவிழாவினை SRIRANGAM TEMPLE LIVE என்ற யூடூப் இணையதள முகவரியில் பக்தர்கள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.