அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை – ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாதம் மற்றும் காவிரி ஆற்று மணல் அனுப்பப்பட்டது!!

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை – ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாதம் மற்றும் காவிரி ஆற்று மணல் அனுப்பப்பட்டது!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விமானம் பிரம்மதேவனின் தவ பலத்தால் திருப்பாற்கடலில் தோன்றியதாகும். அதனை பிரம்மா தேவலோகத்தில் நெடுங்காலம் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் புரிந்துவரும் படி பிரம்மதேவர் சூரியனை நியமித்தார் . பின்னர் ஸ்ரீ ராமபிரானின் முன்னோரான சூரிய குலத்தில் தோன்றிய இஷவாகு மன்னன் இவ்விமானத்தை தனது தலைநகராகிய அயோத்திக்கு வழிபடக் எடுத்து வந்தான்.

திருமாலின் அவதாரமாக தோன்றிய ஸ்ரீராமபிரான் இலங்கை வேந்தன் இராவணனை அழித்து பட்டாபிஷேகம் நடத்திய காலகட்டத்தில் ராவணனின் சகோதரன் விபீஷணனுக்கு அன்பு பரிசாக இந்த விமானத்தை அளித்தார். விபீஷணன் தனது தலையின் மேல் விமானத்தை சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பெருக்கெடுத்து ஓடிய காவிரி கரையில் களைப்பின் மிகுதியால் கீழே இறக்கி வைத்துவிட்டு நீராடினார். நீராடிவிட்டு மீண்டும் விமானத்தை எடுப்பதற்கு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை, அந்த விமானம் அங்கேயே நிலைகொண்டுவிட்டது . ராமபிரான் வழங்கிய விமானத்தை தனது நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி விபீஷணன் வருந்தினான். பின்னர் அசரீரி கூறிய ஆறுதல் வார்த்தைகளுக்கு பின் அவன் ஸ்ரீரங்க விமானத்தை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பினான். எனினும் விபீஷணனின் விருப்பத்திற்கிணங்க ஸ்ரீரங்கநாதர் இலங்கை நோக்கி கோயில் கொண்டார்.

இவ்வகையில் ஸ்ரீரங்கம் , ஸ்ரீ ராமர் , அயோத்தி இடையிலான தொடர்பு தொன்மையானது . தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்க உள்ளன . இதற்கான பூமி பூஜை விழா 5ம் தேதி நடைபெற உள்ளது . இதற்காக நாட்டின் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து பொருட்கள் அயோத்திக்கு கொண்டுவரப்படுகின்றன. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து புனித மணல , ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் இருந்து புனித மணல் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .

Advertisement

அதேபோல் இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பெருமாள் பிரசாதங்கள் , வஸ்த்திரம் , மற்றும் காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் சேகரிக்கப்பட்ட புனித மணல் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பக்தர்களும் , பொதுமக்களும் கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.