காவிரி புதிய பாலம் - இம்மாத இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

காவிரி புதிய பாலம் - இம்மாத இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

திருச்சியை ஸ்ரீரங்கத்துடன் இணைக்கும் விதமாக காவிரி ஆற்றின் குறுக்கே 1976-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் வலுவிழந்ததாலும், எதிர்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அந்த பாலத்தின் அருகே ரூ.106 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பாலம் கட்டுவதற்காக (2024-25)-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் தற்போது உள்ள பாலத்தின் மேற்கே 545 மீட்டர் நீளம் 17.75 மீட்டர் அகலத்தில், இருபுறமும் தலா 1.5 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதையுடன் 4 வழித்தடங்களுடன் கட்டப்பட உள்ளது. பாலம் கட்டுமானத்துக்கு ரூ.68 கோடி, நில கையகபடுத்த ரூ.30 கோடி, அணுகு சாலை, ரவுண்டானா, மின்கம்பம் அமைப்பது உள்ளிட்ட வசதிகளுக்காக ரூ.8 கோடி என மொத்தம் ரூ.106 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. 

பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணிகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர். பின்னர், அடுத்தடுத்த மாதங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருந்ததால், பெரிய அளவில் பணியை மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை மூடும் காலத்தை பயன்படுத்தி பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்தாண்டு ஜனவரி மாத இறுதியில் மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு, மீண்டும் ஜூன் மாதம் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆற்றில் கட்டப்பட வேண்டிய பாலத்தின் கட்டுமானப் பணிகளை பெருமளவில் முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக காவிரியில் செல்லும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால், ஆங்காங்கே மணல் குவியலை ஏற்படுத்தி நீரின் ஓட்டம் திருப்பி விடப்பட்டு, கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணி தற்போது தொடங்கப் பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் ஆற்றில் மேற்கொள்ள வேண்டிய கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கிவிடும். பாலம் கட்டும் திட்டத்தின் பெரும்பகுதியை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision