தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று தலைதூக்கத் தொடங்கி விட்டதாக திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று தலைதூக்கத் தொடங்கி விட்டதாக திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருச்சி– திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லுாரியில், இன்று (30.12.2021) மாலை நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, 1,084.80 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கும் வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில், புதிதாக கட்டப்பட்ட. சத்திரம் பஸ் ஸ்டாண்ட், கால்நடை மருந்தக கட்டிடங்கள், மாணவிகளுக்கான தங்கும் விடுதி, கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப், மின் விளக்குகளுடன் ஒளிரும் மலைக்கோட்டை, மருங்காபுரி வட்டாரதுக்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், மன்னார்புரத்தில் மண் பரிசோதனை ஆய்வகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், நாகமங்கலம் ஓடைத் துறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உட்பட 153 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு வழங்கினார்.

மேலும் 28 அரசு துறைகளின் மூலம், 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு, 327 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மொத்தம் 1,084.80 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கும் வழங்கினார். இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கருணாநிதியை தலைவராக்கிய திருச்சியில் நடைபெறும் விழாவுக்கு, நான் வந்திருக்கிறேன். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க, திருச்சிக்கு வந்திருக்கிறேன். ஆனால், இன்று, அமைச்சர் நேரு நடத்தும் மக்கள் மாநாட்டில், முதல் முறையாக, முதல்வராக பங்கேற்க வந்திருக்கிறேன்.

மாநாடு நடத்துவது, நேருவுக்கு டீ சாப்பிடுவது போல நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு. திருச்சி மக்களிடம் இருந்து, 78,582 மனுக்கள் பெறப்பட்டு, 45,888 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பரிசீலனையில் உள்ள மற்ற மனுக்களில் தகுதியானவற்றின் கோரிக்கை, நுாற்றுக்கு நுாறு நிறைவேற்றித் தரப்படும். தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் மனு கொடுக்க வேண்டிய தேவையே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும், என்பதே என் லட்சியம். அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். அரசிடம் கோரிக்கை வைத்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இந்த முறையை எப்போதும் நிறுத்த மாட்டோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம்.
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை வழங்கிக் கொண்டிருப்பதால், மகிழ்ச்சியாக உள்ளது.

திருச்சியில் மக்கள் கொடுத்த வரவேற்பை கண்டு, எத்தனை நம்பிக்கை என் மீது வைத்துள்ளனர். இதை எப்படி காப்பாற்றப் போகிறோம், என்று தோன்றியது.
மனு வாங்கும் சோழனாக வலம் வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அரசு அதிகாரிகளே நேரடியாக மக்களிடம் மனுக்களை வாங்க அறிவுறுத்தினேன். ஆனால், சிலர், முதல்வரிடம் தான் மனுக்களை கொடுப்போம் என்ற அளவுக்கு அவர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன், திருச்சியில் நடந்த மாநாட்டில் தெரிவித்த ஏழு உறுதி மொழிகளின்படி தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் ஈ.வெ.ரா., விரும்பிய சமூக நீதி ஆட்சியாகவும், அண்ணாதுரையின் மாநில சுயாட்சியாகவும், கருணாநிதியின் நவீன மேம்பாட்டு ஆட்சியாகவும், காமராஜரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாகவும், ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக இருக்கும், என்று அந்த மாநாட்டில் தெரிவித்தேன்.

கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தபட்டு உள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று தலைதூக்க ஆரம்பித்து விட்டது.இதனால் நிகழ்ச்சி வேண்டாம் என நினைத்தேன். பிறகு 2 அமைச்சர்களிடம் பேசிய போது குறைவான அளவில் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்க திட்டமிடப்பட்டது.மற்றவர்களுக்கு வீடு தேடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

‘நம்மால் முடியும் நம்மால் மட்டுமே முடியும்’ என்று சொன்னதில் இருந்த நம்பிக்கை இப்போது அதிகரித்து விட்டது. கடும் நெருக்கடியிலும், சமூக பொருளாதார முன்னேற்றதுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கொரோனாவின்  கோர தாண்டவம், மழை வெள்ளம் போன்ற சோதனைகளையும் வென்றோம். சோதனையான நேரத்தில், மக்களோடு மக்களாக அரசாங்கமே இருந்தது. மக்கள் கோரிக்கைகளை எங்கள் தோள் மீது வையுங்கள். அதை நிறைவேற்றிக் காட்டுவோம்.

வரும் புத்தாண்டு, கடந்த கால சோகங்கள், சுமைகள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்து, சிறப்பான ஆண்டாக பிறக்கப் போகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களிலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் என்பதை விட, இந்தியாவில் தமிழகம் முதலிடம் என்ற நிலை வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி ஏற்படும் என பேசினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn