சொல்லவும் முடியவில்லை! மெல்லவும் முடியவில்லை! திணறும் பத்திரிக்கையாளர்கள்!!
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கதையாகவே நீண்டு வருகின்றது. கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக களத்தில் நிற்கும் பத்திரிகையாளர்களை மிரட்டும் விதமாக பலவகையில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணறி வருகின்றனர். ஒருபுறம் ஆட்கள் குறைப்பு மறுபுறம் சம்பள குறைப்பு என அன்றாட வாழ்க்கையே திண்டாடி வருகிறது!
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணே இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் இடிந்துபோய் உட்கார்ந்து இருக்கின்றனர். அவர்கள் விழித்திருப்பது எல்லாம் உங்களுடைய விடியலுக்காக தான். அவர்களைப் பரிகசித்தால் உங்களை கேலி செய்கிறீர்கள். அவர்களைப் பாராட்டினால் உங்களைப் புகழ்கிறீர்கள். சொல்லொண்ணா துயரில் மாட்டித் தவிக்கும் பத்திரிக்கையாளர்கள் ஒருபுறம் இருந்தாலும் தங்களுடைய குடும்பங்களை அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வது எப்படி என யோசித்து இன்னொரு பக்கமும் வருந்தி வருகின்றனர் இவர்கள்.
பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய பத்திரிக்கை ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வருகின்றனர். முக்கியமாக அச்சு ஊடகங்கள் ஊழியர்களை குறைத்து விட்டன. சில நகரங்களில் பத்திரிகைக்கான அலுவலகங்களையும் எடுத்து விட்டனர். இதுகுறித்து திருச்சி மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில்… கொரோனா எதிரான போராட்டத்தில் உலகமே இந்தியாவை பாராட்டுகிறது. இவை அனைத்திற்கும் ஓங்கி ஒலிக்கும் ஊடகங்களின் விளைவுதான் இது. தன் உயிரை துச்சமென எண்ணி களத்தில் இன்று இன்றளவும் மக்களுக்காக வாழும் மகத்தான மனிதர்கள் இவர்கள்! இது மாதிரியான நேரங்களில் ஊடக நிறுவனங்கள் இவர்களுக்கு பக்க பலமாக இருக்கும் என்று எண்ணினால் சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு என பயமாக இருக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது என்றார்.
வாங்கும் சிறிய அளவு சம்பளத்தில் கூட 10 முதல் 30 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதை வைத்து அன்றாட வாழ்க்கையை எப்படி நடத்துவது என்கின்ற கேள்விக்குறியில் உள்ளனர் பத்திரிக்கையாளர்கள்! இவர்கள் எளிமையானவர்கள் தான் ஆக்ஸிஜனைப் போல! அருகிலிருக்கும்வரை அருமை புரியாது, அருகிவிட்டால் மூச்சு முட்டும். தம் உயிரையே உருக்கி சமூகநலனுக்காக வரிவரியாக எழுதி வாழ்நாள் முழுக்க போராடியவர்கள் பத்திரிக்கையாளர்கள்.
நீங்கள் உடல் அவர்கள் உயிர் திருச்சி விஷன் சார்பாக பத்திரிக்கையாளர்களுக்கு சமர்ப்பணம்!