இந்தியா இலங்கை இருநாட்டு பக்தர்கள் இணைந்து கச்சத்தீவில் கொண்டாடும் அந்தோணியார் திருவிழா

இந்தியா–இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கச்சத்தீவில் பங்கேற்று கொண்டாடும் அந்தோணியார் திருவிழா இன்று மாலை 4 மணியளவில் துவங்கியது.
கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம் எதிரே உள்ள கொடி மரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கொடியை ஏற்றி திருவிழாவை துவங்கி வைத்தார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், ராமேஸ்வரம் வேர்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம். யாழப்பாணம் முதன்மைகுரு அருட்தந்தை ஜோசப் தாஸ் ஜெபரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து திருச்ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. இரவு புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் ஆலயத்தை வலம் வந்தது. இந்த நிகழ்வுகளில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் என சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்திய பக்தர்கள் 3,424 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். கச்சத்தீவு செல்ல பக்தர்கள் இன்று அதிகாலையிலிருந்தே ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்தனர். கச்சத்தீவு செல்ல விண்ணப்பித்திவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட்டையும், மீன்வளத்துறையின் சார்பாக கடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘‘லைப் ஜாக்கெட்’’ வழங்கப்பட்டது. இன்று காலை 7 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கச்சத்தீவுக்கு செல்லும் பக்தர்களின் படகுகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமேசுவரம் வட்டாச்சியர் அப்துல் ஜப்பார், கடலோர காவல்படைஅதிகாரி வினாய்குமார், சுங்கத்துறை துணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கச்சத்தீவு செல்லும் இந்திய யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்காக இந்திய கடற்படையின் கப்பல், கடலோர காவல்படை, மற்றும் தமிழக மெரைன் போலீஸான் ரோந்து படகுகள் ஈடுபடுத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாளை காலை சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும். அதனைத் தொடர்ந்து இரு நாட்டினரும் அவரவர் நாடு திரும்புவார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision