கொரோனா காலத்திலும் தாய்ப்பால் தானம் செய்ய உதவிடும் முகநூல் தோழிகள்

கொரோனா காலத்திலும் தாய்ப்பால் தானம் செய்ய உதவிடும் முகநூல் தோழிகள்

பெற்றோர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை சரியான முறையில் தெளிவுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்து முகநூலில் Trichy Parenting Circle என்ற குழுவை வழிநடத்துகின்றார்கள்   திருச்சியை சேர்ந்த கல்லூரி தோழிகளான எழில்வாணி மற்றும் யுவப்பிரியா. அப்படி இவர்கள் என்ன செய்தார்கள் அக்குழுவில் என்னவெல்லாம் பிகிர்ந்துள்ளார்கள் என்பது பற்றி அவர்களே கூறியிருக்கிறார்கள்.

இந்த குழுவின் மிக முக்கிய நோக்கமே, பெற்றோர்களை ஒன்றிணைத்தல், தாய்ப்பால் தானம், இயற்கையோடு ஒன்றி வாழ்வதன் அவசியம், பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு,  ஆட்டிசம் பற்றிய புரிதல், முதல் முறை குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை பொதுவெளியில் தீர்ப்பதற்கான ஒரு வழித்தடமாக அமைய செய்வதே. வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும், இல்லத்தரசிகள், முதியவர்கள் என 770 பேர் இந்த குழுவில் உள்ளனர்.

தங்களுடைய சந்தேகங்களை அவர்கள் பதிவிடும் போது அதற்கு அக்குழுவில் இணைந்திருக்கும்  யாராக இருந்தாலும் பதில் அளிக்கலாம். இக்குழுவில் இணைவதற்கு சில வரையறை கேள்விகளை உருவாக்கியுள்ளோம். இதற்கான காரணம் குழுவை ஒரு ஒழுங்கியல் அமைப்போடு செயல்படுத்துவதற்காக என்கின்றனர், இதுபோன்ற அமைப்புகள் மும்பை, சென்னை, நாமக்கல் போன்ற மெட்ரோ நகரங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் திருச்சியில் முதல் முறையாக நாங்கள் இதை தொடங்கியுள்ளோம். 2018 முதல் இந்த குழுவை வழி நடத்தி கொண்டிருக்கிறோம். எங்களின் மிகப்பெரிய வெற்றியாக கருதுவது தாய்ப்பால்தானம் தான்.

தாய்ப்பால் என்பது மிக அவசியமான ஒன்று ஒரு குழந்தைக்கு மூன்று ஆண்டுகள் வரை தாய்ப்பால் அளிக்க வேண்டும். ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதே மிக அரிதான ஒன்றாக இருக்கின்றது. எனவே அவர்களுக்கு பயன்படும் விதமாக தாய்ப்பால் தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற மிக முக்கிய நோக்கத்தோடு செயல்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் தாய்ப்பால் தானம் செய்ய நினைப்பவர்கள் நேரடியாக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தாய்ப்பால் தானம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பலரும் இதற்கு முன் வர தயங்கிய நிலையில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று தாய்ப்பாலை பெற்று உதவி தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் உதவி வருகிறோம். 

குழந்தை வளர்ப்பதில் தேவைப்படும் ஆலோசனை, உளவியல் ரீதியாக அவர்களை கையாளும் விதம் உணவு பழக்கங்கள் தாய் பால் தருவதன் முக்கியத்துவம் குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கும் முதல் முறை குழந்தை பெறும் தருணத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டியவை போன்றவற்றிற்கும் அரசு மருத்துவர்களின் ஆலோசனைகளை வீடியோவாக குழுவில் பகிர்கின்றோம். இந்தக் குழுவின் நோக்கம் அறிந்த பின் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை செவிலியர்களும், மருத்துவர்களும் எங்களுக்கான சந்தேகங்களை தீர்ப்பதற்கும் பல வழிகளில் உதவி வருகின்றன.

கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் சந்திப்பு என்ற பெயரில் பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்புகளையும் உருவாக்க்குகிறோம். சென்னை, மும்பை போன்ற நகரங்களில் செயல்படும் இதுபோன்ற அமைப்பினரும் எங்களுக்கு ஆலோசனைகளை அளித்து வருகின்றனர். அதேபோல் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் நட்பாக இருக்கின்றனர்.

தனி ஒருவராக செய்வதிற்கும் ஒரு அமைப்பின் பின்னால் செய்வதற்கும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதை இந்த குழுவின் மூலம் அறிந்து கொண்டோம். இன்றைக்கு 770 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக  உறவை போல் தங்களுக்கான சந்தேகங்களையும், அதற்கான தீர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் பொழுது ஒரு மகிழ்ச்சியும் வாழ்க்கையில் ஒரு நிறைவும் ஏற்படுவதாக கூறுகின்றனர் இந்த முகநூல் சேவகிகள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx