பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

சென்னை அப்போலோ டெலிமெடிசின் நெட்வொர்க்கிங் பவுண்டேஷன், ரானே பவுண்டேஷன், ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி எலைட் மற்றும் ஹோலிரெடிமர்ஸ் தொடக்கப்பள்ளி இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

ஹோலிரெடிமர்ஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி வனஜா தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி எலைட் செயலாளர் ஜோசப்ராஜ் முன்னிலை வகித்தார். அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் பவுண்டேஷன் கண் பார்வை விழித்திரை தேர்வாய்வாளர் சிவசங்கர் கண் பரிசோதனை செய்தார்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் பேசுகையில்..... நவீன வாழ்க்கை சூழலாலும் உணவு பழக்க வழக்கத்தாலும் குழந்தைப் பருவத்திலேயே கண் பாதிப்புகள் ஏற்படுகிறது. கண்ணில் ஏற்படும் பாதிப்புகளைக் குழந்தைப் பருவத்திலேயே கவனித்துச் சிகிச்சை பெற்றால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். நடுத்தர வயதினருக்கு நீரிழிவு நோய் காரணமாகக் கண்புரை, விழித்திரை பாதிப்பு, கண் நீர்அழுத்த நோய் எனப் பலதரப்பட்ட நோய்கள் தாக்கிப் பார்வையைப் பறிக்கின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முறையான கண் பரிசோதனைகள் அவசியம். பார்வையில் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் பரிசோதனை அவசியமாகிறது என்றார்.

ரோட்ராக்ட் உறுப்பினர் ஜீவானந்தன் பேசுகையில்..... பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள்‌ பலர்க்கு பார்வையில் குறை உண்டாகி, கண்ணுக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். எனவே, எட்டு வயதுக்குள் எல்லாக் குழந்தைகளும் ஒருமுறை கண் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. கண்ணைப் பாதிக்கும் சத்துக்குறைவு நோய்களில் பெரும்பாலும் வைட்டமின் ஏ பற்றாக்குறையால் தான் பலரும் துன்பப்படுகிறார்கள். இதைச் சாதாரணக் கண் பரிசோதனையிலேயே தெரிந்துகொள்ள முடியும். டார்ச் லைட் வெளிச்சத்தில் கண்களை நேரடியாகப் பார்த்து விழிவெண்படல நோயைக் கணிப்பார்கள். இதை எல்லா வயதினரும் எல்லா மருத்துவர்களிடமும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளலாம்.

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் குறைபாட்டால் கார்னியாவில் ஏற்படும் குறைபாடுகளையும் கண்புரை நோயையும் (Cataract) பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையிலேயே தெரிந்துகொள்ள முடியும். பார்வை வித்தியாசமாகத் தெரிந்தால், அது மாறுகண்ணா இல்லையா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, குழந்தைகளின் மாறுகண் பிரச்சினைக்கு எவ்வளவு விரைவாகச் இயலுமோ, அவ்வளவு விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும். 

பார்வைப் பிரச்சினைக்காகக் கண்ணாடி அணிபவர்கள், கண்ணாடியை மாற்றும்போது அல்லது வருடத்துக்கு ஒருமுறை கண் பார்வை பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக, தூரப்பார்வைக் குறைபாடு, நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் தவறாமல் செய்துகொள்ள வேண்டும்‌. இருசக்கர வாகனங்களில் செல்வோருக்குக் கண்களில் வறண்ட காற்று, சிறு தூசுகள் தொடர்ந்து படும்போது, விழிவெண்படலத்தில் பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்க்கத் தரமான கண்ணாடி மற்றும் ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கணினி மற்றும் அலைபேசி திரையைத் தொடர்ந்து பார்க்கும்போதும் கண் பார்வையில் பிரச்சினை வரும். காரட், பீட்ரூட், வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, அரைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, சிறு கீரை உள்ளிட்ட அனைத்துக் கீரைகள், ஆப்பிள், மஞ்சள் நிறப் பழங்கள், மீன் போன்ற வைட்டமின் ஏ மிகுந்த உணவைக் குழந்தைப் பருவத்திலிருந்தே சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொண்டால், கண் பார்வையை நீண்ட காலம் பாதுகாக்க முடியும்.

கண் சிவத்தல், எரிச்சல், உறுத்தல் போன்ற எந்தப் பிரச்சினைக்கும் சுயமருத்துவம் செய்து கொள்ளக்கூடாது என்றார். இலவச கண் பரிசோதனை முகாமில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கண் பரிசோதனை செய்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision