இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை திமுக பொய் பிரச்சாரம்- திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜாதேவி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று திருச்சியில் உள்ள வெல்லமண்டி நடராஜனின் வீட்டிற்கு சென்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,என்ன காரணத்திற்காக அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறதோ அது குறித்து தான் விவாதிப்பார்கள்.அனைத்து கட்சி கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம் எங்கள் கட்சி சார்பில் துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் அதில் பங்கேற்பார்.
நாங்கள் பேரறிஞர் அண்ணாவின் வழி வந்தவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலமே போதும் என்கிற நிலை தான் உள்ளது. இருந்த பொழுதும் தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப விருப்பப்பட்டால் மூன்றாவது மொழியை படிக்கலாம்.திமுக பொய் பிரச்சாரம் செய்வதுபோல் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. விருப்பப்படுபவர்கள் மூன்றாவது மொழியில் கற்றுக் கொள்ளலாம் என தான் கூறியுள்ளது.மூன்றாவது மொழி வேண்டாம் என முதலமைச்சர் நினைத்தால் அவர் நேரடியாக பிரதமரை சந்தித்து இது குறித்து பேசலாம். பிரதமரை நேரடியாக சந்தித்து இது குறித்து விளக்கி கல்விக்கான நிதியை கேட்டால் தாய் உள்ளத்தோடு பிரதமர் நிதி வழங்குவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. மாறாக இதை விட்டுவிட்டு இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.
தமிழ்நாட்டில் பலர் இந்தியை படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்று இந்தி. அது வேண்டாம் என நாம் முடிவெடுத்து விட்டால் இது குறித்து பிரதமரை சந்தித்து தான் பேச வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் முதலில் பிரதமரை சந்தித்து பேசட்டும் அதன் பின் கூட்டணி கட்சி என்கிற அடிப்படையில் நாங்களும் தேவைப்பட்டால் பேசுவோம்.அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதை விரும்பவில்லை என நாங்கள் மத்திய அரசிடம் எடுத்துக் கூறினோம். அதனை கேட்டுக்கொண்ட மத்திய அரசு அங்குத் திட்டத்தை ரத்து செய்தது அதேபோல இரு மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பிரதமரை சென்று பார்க்கட்டும் அதன் பின் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அதிமுக தான். ஆனால் மக்கள் மன்றத்தில் அவர்களின் செயல்பாடுகள் எதிர்க்கட்சியாக எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும். திமுகவிற்கு பயந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அடக்கி வாசிக்கிறார்.திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரட்டை இலையை தவறாக பயன்படுத்துகிறார்.தன் சுயநலத்திற்காக அதிமுகவையும் இரட்டை இலையையும் கேடயமாக பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்.மீண்டும் அதிமுக பிளவு படுமா என்பது குறித்து எனக்கு தெரியாது ஜோசியம் எல்லாம் எனக்கு தெரியாது.நீதிமன்ற உத்தரவின் படி தான் சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவை யாராக இருந்தாலும் மதிப்பளித்து தான் ஆகவேண்டும்.
திமுக சீமான் மீது எந்த அரசியல் அழுத்தமும் கொடுக்கவில்லை நீதிமன்ற உத்தரவின்படி தான் காவல்துறை நடவடிக்கைகள் இருக்கும்.அவர் இயக்குனராக இருந்திருந்தாலும் யாராக இருந்தாலும் தவறு செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் அவர் ஒரு கட்சி தலைவராக இருப்பதால் இந்த விவகாரம் அதிகம் பேசப்படுகிறது.காவல்துறை சீமானை திட்டமிட்டு இதில் சிக்க வைத்திருப்பதாக நான் நம்பவில்லை.தாத்தா என அழைக்க வேண்டிய வயதில் முதலமைச்சரை அப்பா என அழைப்பதால் அவர் மகிழ்ச்சி அடைகிறார் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision