இலக்கியத்தில் விருந்தோம்பல்

இலக்கியத்தில் விருந்தோம்பல்

கம்ப ராமாயணத்தில் சீதை இல்லாமல் விருந்தோம்பல் செய்ய, ராமர் எவ்வாறு துன்பப் படுவார் என கம்பர் குறிப்பிட்டிருந்ததை கடந்த கட்டுரையில் பார்த்தோம். இல்லற வாழ்வில் விருந்தோம்பல் செய்வது என்பது ஓர் தலையாய கடமையாக இருந்திருக்கிறது. அதற்கு உதாரணத்தை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அற்புதமாக எடுத்துக்காட்டி இருக்கிறார். 

இல்லறத்தில் ஆண் பெண் இருவரும் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதற்கு, கொலைக்களக் காதையில் இளங்கோவடிகள் கண்ணகியின் வாயிலாக கோவலனுக்கு சொல்வது போல சொல்லியிருக்கிறார். 

கண்ணகியிடம் கோவலன், நான் இல்லாமல் நீ வருந்தினாயா? எவ்வாறு இருந்தாய்? துன்பமுற்றாயா? என்று கேட்கிறான். அதற்கு கண்ணகி சொல்கிறாள், நீவிர் இல்லை என்ற வருத்தம் என்னுள் இருந்தாலும், உமது பெற்றோர் எண்ணை நன்முறையில் நடத்தினார்கள், எனக்கு மிகுந்த வருத்தம் வராமல் பார்த்துக் கொண்டார்கள். அதனால் நான் அதிகம் துன்பத்தை வெளிக்கொணர்ந்து காட்டியதில்லை 

ஆனால், அறவோர்க்கு கொடுக்க வேண்டிய மரியாதை, அந்தணர்க்கு செலுத்த வேண்டிய கடமை, துறவோரை எதிர்கொண்டு மரியாதை செய்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல் இவையெல்லாம் கணவனாகிய நீ இல்லாமல் என்னால் செய்ய இயலவில்லை என்று கூறுகிறாள். 

இவற்றுள் தொல்லோர் சிறப்பின் என்று கூறியிருக்கிறார் இளங்கோவடிகள், தொல்லோர் என்பதன் பொருள் முன்னோர்கள் என்பதாகும். சிலப்பதிகாரம் எழுதி 2000 ஆண்டுகள் ஆயிற்று, அப்பொழுதே இளங்கோவடிகள் முன்னோர் சிறப்பாக செய்த விருந்தோம்பல் என்று எழுதியிருக்கிறார் என்றால், அதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் கலாச்சாரத்தில், இல்லறவாழ்வில் விருந்தோம்பல் நன்முறையில் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது.

இதை கணவன் இல்லாமல் மனைவி செய்வதும் கடினம், மனைவி இல்லாமல் கணவன் செய்வதும் கடினம் என்பதைத்தான், சீதை கூறியதாகக் கம்பரும், கண்ணகி கூறியதாக இளங்கோவடிகளும் கூறியிருக்கிறார்கள். நான் இல்லாமல் ராமர் எவ்வாறு விருந்தோம்பல் செய்வார் என்று சீதையும், நீ இல்லாமல் என்னால் விருந்தோம்பல் செய்ய முடியவில்லை என்று கண்ணகியும் கூறியிருக்கிறார்கள் என்று, கம்பரும் இளங்கோவடிகளும் எழுதியிருக்கிறார்கள். 

இல்லறத்தின் தலையாய கடமையான விருந்தோம்பல், சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதை “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர்கோடலும்” என்ற வரிகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. 

இந்த கடமைகளைச் செய்யாமல் நான் குடும்பத் தலைவி என்ற பொறுப்பை இழந்தேன் என பொருள்படுவதாக, இழந்த என்னை என கண்ணகி கூறியிருப்பாள். ஆம், குடும்பத் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள ஓர் தலையாய கடமை விருந்தோம்பல் செய்வதாகும். அந்த அற்புத வரிகளை நாம் இங்கே காண்போம்

அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை,  - சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

தொகுப்பாளர்- தமிழூர். கபிலன் 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision