இலக்கியத்தில் விருந்தோமபல் - பகுதி 5
விருந்தோம்பல் பற்றித் தொடர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம் இலக்கியத்தில் பன்னெடுங்காலமாக விருந்தோம்பல் முறையைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. அவற்றை அறிந்து கொண்டு நம் பெருமையை, நம் பாரம்பரியத்தை விருந்தோம்பல் முறையை, இன்றைய தலைமுறையில் நாம் எல்லோரும் செய்ய வழி வகுக்கவே இந்தக் கட்டுரை. நாம் செய்ய வேண்டிய உபசரிப்பு முறையை தெரிந்து கொள்வதற்காகவே, இங்கே இவற்றை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
விருந்தினரை அனைவரும் போற்றி உள்ளனர் என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஒரு பாடல். மன்னர்களும் விருந்தோம்பல் செய்வதில் ஆகச் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே நம் அறிந்து கொள்ள ஒரு பாடல்,
பொருநாராற்றுப்படையில் விருந்தோம்பல் பற்றி அற்புதமான குறிப்பு ஒன்று உள்ளது. ஆற்றுப்படையில் எளியவர், வசதி இல்லாதவர், மன்னரிடம் உபசரிப்பும் பொருளும் பெற்று வரும்பொழுது, மற்றொரு எளியவரிடத்தில் நான் எவ்வாறு மன்னரிடத்தில் விருந்தோம்பலும் பரிசுகளும் பெற்றேன் என்று கூறுவதாக அமைந்திருக்கும் இப்பாடலின் கருத்தை நாம் பார்ப்போம்.
என்னை மன்னன் எவ்வாறு உபசரித்தான் தெரியுமா? ஒரு நல்ல நண்பனைப் போல உறவு கொண்டு, இனிய அற்புதமான சொற்களைக் கூறி, தன் கண்ணின் முன்னாலேயே இருக்கும்படி அமரச் செய்து, நெருக்கமாக இருந்து, பசு கன்றினிற்கு காட்டும் அன்பைப் போல், அன்பின் மழையை பொழிந்து என்னுடைய எலும்பு குளிரும்படியான அளவுக்கு அன்பால் நெகிழச் செய்துவிட்டான் என்று கூறியிருக்கிறார்.
உள்ளம் மகிழ்ந்து உடல் குளிர்ந்தது என்று நாம் சொல்வோம். அதில் எலும்பு குளிரும் அளவுக்கு எனக்கு உபசரிப்பு செய்தான் என்று இந்த பாடலில் கூறியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு உபசரிக்க வேண்டும் என்பதை மன்னர்களும் மக்களும் பன்னெடுங்காலமாக நமது கலாச்சாரத்தில் கூறியிருக்கிறார்கள்.
நீயும் அங்கே சென்றால் உனக்கும் நல்ல உபசரிப்பும், பரிசுகளும் கிடைக்கும். அதனால் நீ செல்லத் தயங்காதே, மறக்காமல் அங்கே செல் என்பது போல இருக்கும் இந்த பாடல், நமது கலாச்சாரத்தை மேலும் பறைசாற்றுகிறது. இப்பேற்பட்ட பாடல்களையெல்லாம் நாம் நினைவில் கொண்டு நாம் நம் இடத்திற்கு வருபவர்களையும், நம்மைக் காண்பவர்களையும் நல்ல முறையில் அன்பாக பேசி உபசரித்து, அவர்களுக்குத் தேவையான செய்திகளை கொடுத்து, நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, உபசரிப்போம். இந்தப் பொருநாராற்றுப்படை பாடலைக் காண்போம்.
கேளிர்போல கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறி கண்ணில் காண நண்ணுவழி இரீஈ பருகு அன்ன அருகா நோக்கமொடு பொருநராற்றுப்படை
தொகுப்பாளர் - தமிழூர். கபிலன்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision