காணக்கிளிய நல்லூரில் காவல் நிலையம் திறப்பு -அமைச்சர் நேரு பேட்டி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள காணக்கிளியநல்லூரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் இன்று (06.06.2023) திறந்து வைத்தார்.
லால்குடி சட்டமன்ற தொகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க லால்குடி, மற்றும் கல்லக்குடி காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் சட்ட ஒழுங்கிற்காக மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள சிறுகனூர் காவல் நிலைய சரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.. தற்போது சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏற்படும் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் காணக்கிளியநல்லூர் ஊராட்சியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்தக் காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட தாய் கிராமங்களான தாப்பாய், வரகுப்பை, கூடலூர், பூஞ்சை சங்கேந்தி குமுளூர், கண்ணாக்குடி, பெருவளப்பூர்,தெரணி பாளையம், நம்புக்குறிச்சி, சிறுகளப்பூர், அழுந் தலைப்பூர், கருடமங்கலம், சரடமங்கலம், ஊட்டத்தூர், தச்சங் குறிச்சி, புதூர் உத்தமனூர், காணக்கிளியநல்லூர் மற்றும் குக் கிராமங்களான டி. மேட்டூர், சிறுவயலூர், வந்தலை, விடுதலைப்புரம், வளர்நாதபுரம், கொளக்குடி, உக்கலூர் நல்லூர் உள்ளிட்ட கிராமங்கள் இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த காவல் நிலையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக டிஜிபி காணொளி காட்சி மூலம் இன்று காலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து காணக்கிளிய நல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்நிலையத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவணன சுந்தர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் காவலர்கள்,அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசிய போது..... தமிழக முதல்வர் திருச்சி மாவட்டம் மட்டுமல்ல அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வரும் 8ம் தேதி தஞ்சைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அன்று இரவு தஞ்சையில் தங்கி விட்டு தஞ்சாவூர் மற்றும் திருவையாறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் தூர்வாரிய பணியினை பார்வையிட்டும் அதனைத் தொடர்ந்து திருவையாறு வழியாக பூண்டி செங்கரையூர் பாலம் வழியாக திருச்சி லால்குடி தொகுதிக்கு வந்து கூழையாறு, மற்றும் நந்தியாறு ஆகியவற்றில் நடைபெற்ற பணிகளை பார்வையிடுகிறார் என தெரிவித்தார். ஒரு ஆய்வாளர் இரண்டு உதவி ஆய்வாளர்கள், 29 இதர காவலர்கள் எண்ணிக்கையில் துவங்கப்பட்டுள்ள புதிய காவல் நிலையம் இன்று முதல் செயல்பட துவங்கும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn