திருச்சியில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய நபர் கைது
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடியில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை கடந்த மாதம் மர்ம நபர்கள் சேதப்படுத்தியிருந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிறுகனூர் போலீசார் சிலையில் குரங்கு அமர்ந்து உடைந்ததாக வழக்கை சுமூகமாக முடித்தனர். இதனைத்தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் சேதமடைந்த எம்.ஜி.ஆர் சிலையை அப்போது சீரமைத்தனர். இந்நிலையில் அதே சிலை மீண்டும் இரண்டாவது முறையாக சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த சிலையை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அரசியல் சர்ச்சையை கிளப்பும் வகையில் இதுபோன்று மர்ம நபர்கள் யாரோ தொடர்ந்து இரண்டாவது முறையாக சிலையை சேதப்படுத்தியிருக்கலாம் எனவே உடனடியாக இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சிலையை சேதப்படுத்திய நபரை கைது செய்ய சிறுகனூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை உடைத்தது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூச்சலிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதிமுகவின் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி உள்ளிட்ட போலீசார் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சிலையை உடைத்த நபரை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இந்நிலையில் சிலையை உடைத்த நபர் குறித்து சிறுகனூர் போலீசார் தீவிரமாக நடத்திய விசாரணையில், ரெட்டிமாங்குடி நடுத்தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (47) என்பது தெரியவந்தது.
பின்னர் சிறுகனூர் போலீசார் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சிலை உடைத்தது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறுகையில்.... முதல் முறை சிலை உடைத்த போதே போலீசார் மெத்தனமாக செயல்பட்டதால், இரண்டாவது முறையாக முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ சிலையை அடித்து உடைக்கப்பட்டது. ஆனால் சிலை உடைக்கப்பட்டதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் ஆய்வு செய்து சிலை உடைத்த நபரை உடனே கைது செய்ய உத்தரவு பிறப்பித்தால் தான் சிறுகனூர் போலீசார் துரிதமாக விசாரணையை மேற்கொண்டு சிலை உடைத்த நபரை கைது செய்ததாக தெரிவிக்கின்றனர்.