மாட்டு வண்டி ஓட்டி அசத்தி உறியடித்து பொங்கல் விழாவை கொண்டாடிய அமைச்சர்

மாட்டு வண்டி ஓட்டி அசத்தி உறியடித்து பொங்கல் விழாவை கொண்டாடிய அமைச்சர்

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் இணைந்து இன்று பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தயார் நிலையில் இருந்த மாட்டு வண்டியில் ஏறி மாட்டு வண்டியை ஓட்டி விழா அரங்கிற்கு வந்து சேர்ந்தார்.

மாட்டு வண்டியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் நின்று பயணம் மேற்கொண்டனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து போட்டிருந்த கோலங்களை பார்வையிட்டு சிறந்த கோலங்களுக்கு முதல் மூன்று பரிசுகளை வழங்கி அவர்களை பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரே அடியில் அமைச்சர் நேரு பானையை உடைத்தார். மேலும் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கயிறு இழுக்கும் போட்டியை தொடங்கி வைத்து ஊழியர்களுடன் சேர்ந்து கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து நெருப்பு மூட்டப்பட்டு பொங்கல் வைக்க தயாராக இருந்த பானையில் பொங்கலுக்கான அரிசியை அள்ளிப்போட்டு மருத்துவ கல்லூரி ஊழியர்களோடு சமத்துவ பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினார். 

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் குமரவேல் துணை முதல்வர் அர்ஷத் பேகம், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் இதர ஊழியர்கள் பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision