பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலாதின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவர்களுடன் விழிப்புணர்வு பற்றி உரையாடி, மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுதுபொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலகச் சுற்றுலா தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒருநாள் விழிப்புணர்வுச் சுற்றுலா மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து தொடங்கியது. இச்சுற்றுலாவிற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திலிருக்கும் 50 பள்ளி மாணவஃமாணவியர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

இச்சுற்றுலாவில் முதலில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அண்ணா அறிவியல் கோளரங்கத்திற்கு அழைத்துச் சென்று டைனசர் பார்க், அறிவியல் பூங்கா, 3D show போன்றவற்றை கண்டுகளித்தனர். பின்னர் மாணவர்களை திருச்சிராப்பள்ளி, மேலூரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு அழைத்து சென்று அங்கு நட்சத்திரவனம், செயற்கை 100 அடி நீருற்று, படகு சவாரி, வண்ணத்துப்பூச்சி வளர்ப்பு அரங்கு மற்றும் வண்ணத்துப்பூச்சி மற்றும் இயற்கை சார்ந்த குறும்படம் ஆகியவற்றை கண்டு களித்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாலை அ/மி. அரங்கநாதசுவாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம் சென்று பார்வையிட்டனர். சுற்றுலாப் பயண வழிகாட்டி மூலமாக கோவில் சிறப்புகள், வரலாற்றுப் பெருமைகள், கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாட்டுச் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. இறுதியாக, மாணவ, மாணவியர்களிடம் இச்சுற்றுலாப் பற்றிய கருத்துக்களை கருத்துகேட்பு படிவத்தில் பூர்த்தி செய்து பெறப்பட்டது. திருச்சி கலையரங்கத்தில் சுற்றுலா நிறைவு பெற்று பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் நலபாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு மைய்ய காப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision