6000 ரூபாய் பணத்திற்காக தன் குழந்தையை விற்ற பெற்றோர் - தந்தை மரணம் - அதிர்ச்சி பின்னணி!!
தீண்டாமை, குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை ஆகியவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டன என்றாலும் கூட அதன் எச்சங்கள் இன்றளவும் இருந்துதான் வருகின்றன. இந்த மூன்று பாதக செயல்களிலும் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். ஒருபுறம் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் போதும், மறுபுறம் வீட்டின் துயர நிலையினாலும் குழந்தை தொழிலாளராக மாறும் அவல நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. அந்தவகையில் 6000 ரூபாய் பணத்திற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பாக தான் பெற்ற பிள்ளையை அடமானமாக வைத்து இறுதியில் தந்தை தற்கொலை செய்து முடிவில்லா வாழ்வில் முற்றுப்புள்ளி வைத்த கதையினை திருச்சி விஷன் இணையதளம் வெளியிடுகிறது.
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றாம்பட்டி கிராமத்தை சேர்ந்த குப்பன் - கெங்கம்மாள் தம்பதியரின் மகன் ராஜா (13) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது).
ஏழ்மையான நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 6000 ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். இந்த கடனை அடைப்பதற்காக வழியின்றி தன்னுடைய மகனை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக அடமானமாக வைத்து உள்ளனர். அந்த ஓராண்டு காலத்தில் அந்த சிறுவன் அவரின் வாத்துகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக வாத்து மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து கடத்தி வந்துள்ளார். இதற்கிடையில் சிறுவன் ராஜாவின் தந்தை என் மகன் எங்கே என்றதற்கு எனக்கு தெரியவில்லை என பதில் அளித்ததும் மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில்தான் கடலூருக்கு கடத்திவரப்பட்ட சிறுவன் அங்கே ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமையாக தினமும் நடத்தி வந்துள்ளார்கள். அப்போதுதான் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கஜேந்திரன் (35) என்பவர் கடலூரில் கடத்திவரப்பட்ட சிறுவனை "என்னுடைய ஆடுகளை மேய்க்க கூட்டி செல்கிறேன்" என கைமாற்றி விட்டிருக்கின்றனர். இது தெரியாமல் சிறுவன் ராஜாவின் குடும்பத்தினர் தான் பிள்ளை இறந்துவிட்டதாக நினைத்து மிகுந்த மன உளைச்சலில் ஆளாகி இருந்தனர்.
Advertisement
கஜேந்திரனிடம் சிறுவன் ராஜா ஓராண்டு காலமாக கொத்தடிமையாக அவரின் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். இதுகுறித்து உடையார்பாளையம் அருகில் உள்ள ஒரு சமூக ஆர்வலருக்கு இதுகுறித்த தகவல் சென்றும் கிராம நிர்வாக அலுவலர் வீரமணியிடம் தெரிவித்துள்ளார். வீரமணி இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், அரியலூர் மாவட்ட குழந்தை நல அலுவலர், குழந்தை உதவி மைய பணியாளர், குழந்தை தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது அங்கு சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்.
விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்களை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சிறுவனை மீட்டு உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு அழைத்து சென்று பெற்றோரை கண்டறிந்து தகவல் தெரிவித்தனர். கொத்தடிமையாக சிறுவனை ஆடு மேய்க்க செய்த கஜேந்திரன் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சிறுவனை மீட்க கொத்தடிமைகளை மீட்பதற்காக செயல்படும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்- (IJM) என்ற அமைப்பினர் இணைந்து சிறுவனை மீட்டு தன் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்த குடும்பத்தினரிடம் ராஜாவை கொண்டு போய் சேர்த்தனர். 6000 ரூபாய் பணத்திற்காக தன் பெற்ற மகனையே விற்று இறுதியில் தந்தையும் மன உளைச்சலில் மரணத்தைத் தழுவி தாயோடு சேர்ந்தான் அச்சிறுவன்!
இதுகுறித்து கொத்தடிமை மீட்பு தஞ்சாவூர் SHED India, அமைப்பின் சார்பாக ஜெய் அவர்களிடம் பேசினோம்.... "கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் டெல்டா பகுதியான திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆடுமேய்க்கும் கொத்தடிமைகளாக இருந்தவர்களை நாங்கள் மீட்டு உள்ளோம். குடும்ப வறுமை மற்றும் பணத் தேவைக்காக பெற்று பிள்ளையையே இதுபோல் கொத்தடிமையாக அனுப்பும் பெற்றோர்களுக்கு இன்னும் அக்குழந்தைகள் படும் பாடு புரிவதில்லை. ஆடு மேய்க்க செல்லும் சிறுவர்கள் அங்கேயே இரவு நேரங்களில் ஆடு மற்றும் வாத்து மந்தையில் கொசுகடியில் படுக்க வைக்கப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் ஆடு மற்றும் வாத்து காணாமல் போனால் அச்சிறுவர்களை வன்மையாக தண்டனைக்கும் உள்ளாக்குகின்றன. எனவே இந்தக் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்றால் அது பெற்றோர்கள் கையில் தான் உள்ளது" என்றார்
குடும்பத்தின் கஷ்டம் ஒருபுறம் இருந்தாலும் கொத்தடிமையாக அனுப்பும் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சம் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல...
✒️ஜெரால்டு
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS