முசிரி அருகே தட்டுபாடின்றி காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், முசிரி அருகே தா.பேட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் தட்டுப்பாடு காரணமாக வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து முசிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்தில் தா.பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவிரி குடிநீர் (சம்ப்) தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு காவிரி குடிநீர் இணைப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு மேட்டுப்பாளையம் பேரூராட்சி பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தால் குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புதியதாக கட்டப்பட்ட சம்பிற்கு குடிநீர் இணைப்பு வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் வழங்க கோரி தா.பேட்டை கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் துறையூர் - நாமக்கல் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் முசிரி தாசில்தார் பாத்திமா சகாயராஜ், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கண்ணதாசன், ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது முசிரி தாசில்தார் அலுவலகத்தில் தா.பேட்டை, மேட்டுப்பாளையம் பேரூராட்சியை சேர்ந்த இரு தரப்பினரையும் அழைத்து பேசி குடிநீர் இணைப்பு வழங்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் கைவிட்டு கலைந்து சென்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn