தரமற்ற சாலைகளால் தவிக்கும் திருச்சி மக்கள்

தரமற்ற சாலைகளால் தவிக்கும் திருச்சி மக்கள்

திருச்சி மாநகரத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் போடப்பட்டுள்ள சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

பதைக்க வைக்கும் உயிர்ச்சேதங்களுக்குப் பிறகும் சாலைகளைச் சீரமைப்பதில் திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும் அலட்சியம் காட்டி வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநகர பகுதிகளில் சேதமடைந்த சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலாலும், விபத்துகளாலும் தினந்தோறும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பல பகுதிகளில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக பால்பண்ணையிலிருந்து அரியமங்கலம் வரையுள்ள சாலையில் பயணிப்பது சர்க்கஸ் சாகசம் செய்வதைப்போல் இருப்பதாக வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர். அதேபோல் காந்தி மார்க்கெட்டிலிருந்து பால்பண்ணை வரையுள்ள சாலையும் செப்பனிடப்படாததால் அலுவலக நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எந்தச் சாலை யாருடைய கட்டுப்பாட்டில் வருகிறது என்பதை அறியாத பொதுமக்கள் யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் ஊடகங்களிடம் தங்கள் குமுறல்களை வெளியிட்டு வருகின்றனர். அதிகாரிகளுக்கும் சாலை ஒப்பந்ததாரர்களுக்கும் இடையேயுள்ள 'புரிதல்' காரணமாக இருதரப்பினருமே பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒவ்வொரு சாலையிலும் அதன் மேற்பார்வை அதிகாரி, ஒப்பந்ததாரரின் பெயர்களையும் தொலைபேசி எண்களையும் கொண்ட போர்டுகளை வைக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision