அமர்ந்து படிக்க வசதியின்றித் தவிக்கும் வாசகர்கள் - விரிவுபடுத்த வேண்டுகோள்

அமர்ந்து படிக்க வசதியின்றித் தவிக்கும் வாசகர்கள் - விரிவுபடுத்த வேண்டுகோள்

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் அமர்ந்து படிக்கப் போதுமான இடவசதி இல்லாததால் கடும் சிரமத்துக்கு உள்ளாவதாக வாசகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வோர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இலக்கிய ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் திருச்சி மாவட்ட மைய நூலகத்திற்குத் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

 நகரின் மையப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சிங்காரத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் வாகன நிறுத்துவதற்குப் போதுமான வசதிகள் இல்லை எனக் கூறும் வாசகர்கள் உள்ளே அமர்ந்து படிக்கக்கூட இடமில்லை என்கின்றனர். கட்டடத்தின் ஒரு தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அதனையும் பயன்படுத்த இயலாத நிலையில், கட்டடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமர்ந்து படிக்கவேண்டி இருப்பதாகவும், இது வெளியூர்களிலிருந்து வருவோருக்குப் பெரும் பிரச்னையாக இருப்பதாகவும் வாசகர்கள் குறிப்பிடுகின்றனர்.

 திருச்சி மாவட்டத்தில் 12 பகுதிநேர நூலகங்கள் உட்பட 142 பொது நூலகங்கள் இருந்தபோதிலும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்செய்வோருக்குத் தேவையான புத்தகங்களும், பத்திரிகைகளும் மைய நூலகத்தில் மட்டுமே கிடைப்பதால் அனைவரும் இங்குதான் வரவேண்டி இருக்கிறது என்றும் வாசகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள இடத்திலேயோ அல்லது வேறொரு இடத்திலோ வாகன நிறுத்தம், தேர்வுகளுக்குத் தயார் செய்வோர் அமர்ந்து படிக்கப் போதுமான இருக்கைகளுடன் கூடிய அறைகள், வெளியூர்களிலிருந்து வருவோரின் வசதிக்காக மலிவுவிலை உணவகம்,

நகல் எடுக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் நூலகத்தை விரிவுபடுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்துகின்றனர். மதுரை, கோவை மாநகரங்களைப் போல திருச்சியிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision