மலைக்கோட்டையின் நுழைவு வாயிலை சீரமைத்து தமிழில் பெயர் பலகை வைத்திட  கோரிக்கை

மலைக்கோட்டையின் நுழைவு வாயிலை சீரமைத்து தமிழில் பெயர் பலகை வைத்திட  கோரிக்கை

திருச்சி என்றாலே வரலாற்று புராதன இடங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். இதில் மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், முக்கொம்பூர் என்று சுற்றுலா தளமாக விளங்கி கொண்டிருக்கும் மிக முக்கியமான நகரங்களில் திருச்சி மாநகரமும் ஒன்று. ஆனால் திருச்சியில் வாழும் மக்களுக்கே திருச்சி பற்றிய முழுமையான தெளிவு இல்லை என்பதே வருத்தம். குறிப்பாக தமிழகத்தில் எங்கு சென்றாலும் திருச்சியின் அடையாளம் என்றால் திருச்சி மலைக்கோட்டையைத் தான் முதலில் கூறுவார்கள். திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும்.

இந்த கோவிலின் நுழைவு வாயில் என்பது நாம் மெயின்கார்டு கேட் என்று அழைக்கப்படும் தெப்பக்குளத்திற்கு அருகே தபால் நிலையத்திற்கு எதிரே உள்ளது. அக்கோட்டைக்கு தலைஅரண்வாயில் அல்லது முதன்மை அரண்கதவு அல்லது கோட்டைவாசல் என்று  தமிழில் பெயரிட வேண்டும். அதனை புதுபித்து பாராமரிக்க  வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் திருவேங்கடம் திருச்சி  மாநகராட்சி ஆணையருக்கு முதலில் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்கான பதிலும் அதற்குப் பிறகு அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டதா என்று அவரே கூறுகிறார். 

என் பள்ளி பருவத்தில் நான் படிக்கும் பொழுது இந்த மெயின் கார்டு கேட்டு தான் மலைக் கோட்டையின் நுழைவு வாயில் என்றும், இதனுடைய வரலாறுகளையும் என் பள்ளி ஆசிரியர் எனக்கு கூறி அதனை தலைஅரண்வாயில் என்று தமிழில் கூறும் பொழுது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும். இத்தனை ஆண்டுகளாகியும் இது இன்றளவும் பாராமரிப்பற்று இருப்பதை பார்த்து என்னால் முடிந்தவற்றை ஏதேனும் செய்ய வேண்டும் என்று தான் இதனை முன்னெடுத்து முதல் கடிதமாக திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் அதற்கு எனக்கு பதில் கடிதமாக இக்கடிதம் எங்களுக்கு சம்மந்தப்பட்டதில்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேளுங்கள் என்று திருப்பி அனுப்பினார்கள். 

மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய போது இந்து அறநிலைத்துறைக்கு இந்த கடிதத்தை அனுப்ப கூறினார்கள் அங்கும் சமர்ப்பித்தேன் அங்கு தொல்லியல் துறைக்கு சம்பந்தப்பட்ட கடிதம் என்று அனுப்பினார்கள். பிறகு தொல்லியியல் துறையிலும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் அவர்களுக்கு கடிதம் அனுப்புங்கள் என்று திருப்பி அனுப்பினார்கள் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் போராட்டத்திற்கு பிறகு மத்திய தொல்லியல் துறை சார்ந்தவர்கள் கடிதத்திற்கு பதில் அளித்ததோடு இன்னும் ஐந்து மாதங்களுக்குள் அக்கோட்டையின் நுழைவு வாயிலை சீரமைத்து பெயர் பலகை தமிழில் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர் .


காந்தி சந்தை முன்னால் இருக்கும் மணிகூண்டு முதல் உலகப் போருக்கான அடையாளச் சின்னமாக வைக்கப்பட்டது. இது எத்தனை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே இப்படி நம்முடைய அடையாளங்களை ஒவ்வொன்றாக இழக்கும் போது நம் எதிர்கால சந்ததியினர் நம் வரலாற்றை மறந்து வாழ்வதற்கான நிலை ஏற்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK