ஹான்ஸ் போட்டு டிக் டாக் - வாலிபரை எச்சரித்த எஸ் பி
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பொருளாதார பாடப்பிரிவு படித்து வருகிறார்.
இவர் நண்பர்களுடன் சாலை ஒன்றில் கிரிக்கெட் விளையாடுவது போன்றும், நண்பர் போடும் பந்துகளை தவறவிடுவதும், பின்னர் ஹான்ஸ் போட்டுக் கொண்ட பின்னர் அந்தப் பந்தை சிக்ஸர் அடிப்பது போன்றும் டிக் டாக் செய்து இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. இதனை பார்த்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அந்த வாலிபர் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
விசாரணையில் விக்னேஸ்வரன் குறித்த விபரம் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லூரி மாணவன் விக்னேஸ்வரனை அவரது பெற்றோர்களுடன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வருமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோருடன் வந்த விக்னேஸ்வரனுக்கு எஸ் பி வருண்குமார் போதை புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுரை கூறினார்.
பின்னர் கல்லூரியில் படிக்கும் வாலிபர் என்பதால் வழக்குப்பதிந்தால் வாழ்க்கை பாதிக்கும் என கூறி எச்சரிக்கை விடுத்து இனி இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கூறி அனுப்பி வைத்தார். இதையடுத்து மாணவன் விக்னேஸ்வரன் தான் செய்தது தவறு என்றும், போதை புகையிலை பயன்படுத்தாதீர்கள் எனவும், மற்றொரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision