முதலிடம் பெற்ற மாநகராட்சியில் சாலையின் நடுவே கழிவுநீரூற்று

முதலிடம் பெற்ற மாநகராட்சியில் சாலையின் நடுவே கழிவுநீரூற்று

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 53வது வார்டில் உள்ளது ராக்கின்ஸ் ரோடு. இது மாநகரின் மிக முக்கியமான பகுதியாகும். குறிப்பாக இந்த வார்டில் தான் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய இந்த சாலையில் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள நான்கு சாலை சந்திப்பில் உள்ள புதைவடிகால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக வழிந்து ஓடுகின்றன. மேலும் துர்நாற்றம் வீசுவதால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை உள்ளது.

மாநகரின் பிரதான சாலையாக உள்ள இந்த ராக்கின்ஸ் சாலையில் அரசு அதிகாரிகள் கடந்து செல்கின்றனர். ஆனால் அடைப்பு ஏற்பட்ட கழிவு நீர் சாலையில் செல்வதற்கு தீர்வு காணாமல் அங்கு தடுப்பு வைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். தூய்மை இந்தியா நகரப்பட்டியலில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ள நிலையில், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலை வழியாகத்தான் கடந்து செல்கின்றனர்.

இதை கண்டு முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம், வரி வசூல் செய்யும் மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற பிரதான சாலைகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வார்டுக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர் நாள்தோறும் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் இதை அவர்கள் கண்ணில் படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இதே போன்று மாவட்ட ஆட்சியர் சாலை வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகில்  புதைவடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்று மாநகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision