பணிமனைக்கு சென்ற பஸ் திருச்சி ஜி கார்னரில் கவிழ்ந்து விபத்து- ஓட்டுநர் பலி

பணிமனைக்கு சென்ற பஸ் திருச்சி ஜி கார்னரில் கவிழ்ந்து விபத்து- ஓட்டுநர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அரசு போக்குவரத்து பணிமனை சேர்ந்த பேருந்து ஒன்று இன்று திருச்சி தீரன் நகர் பகுதியில் உள்ள அரசு பணிமனைக்கு சரிபார்த்தல் பணிக்காக இன்று காலை வந்தது. அரசு பேருந்தின் பழுது நீக்க பணி முடிவடைந்த நிலையில் இன்று மாலை திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜி கார்னர் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநர் ரெங்கநாதன் உள்ளிட்ட நான்கு ஊழியர்களுடன் சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏறியபோது, பின்புறம் வந்த லாரி வேகமாக வந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள சிமெண்ட் தடுப்பு  கட்டை மீது ஏறி எதிர் திசையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அரசு பேருந்தை ஓட்டி வந்த துறையூர் அரசு பணிமனையை சேர்ந்த ரங்கநாதன் என்ற ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் இவருடன் வந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்தால் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசையாக நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து எதிர்தசையில் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நேரத்தில் அப்பகுதியில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் அந்த லாரியை அப்போலோ மருத்துவமனை முன்பு போலீசார் விரட்டி பிடித்தனர். ஓட்டுனர் மது அருந்தி இருந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO