இரண்டாம் கட்டமாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திருச்சியில் மாபெரும் தர்ணா போராட்டம்:
திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்ட இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களை சொந்த நாட்டில் அகதிகளாக மாற்ற நினைக்கும் மத்திய அரசின் இந்தப் போக்கை கண்டித்தும் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மாநகரச் செயலாளர் அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்திரஜித், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழாதன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஜவகர், மதிமுக சார்பாக வெல்லமண்டி சோமு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை எழுப்பி வருகின்றனர்.
மேலும் மத்திய அரசு இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசு இச்சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் இதனை தொடர் போராட்டமாக அறிவித்து தொடர்ந்து போராடுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.