திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கைபேசியில் டார்ச் அடித்து காண்பித்த மாணவ, மாணவிகள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு நிகழ்ச்சியில் மாணவர்களுடன் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்கும் நிகழ்வு காணொளி காட்சி வாயிலாக திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகர காவல் ஆணையர் காமினி, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி அப்துல் சமத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் போதை பொருள் இல்லா தமிழ்நாடு என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பேசுகையில்..... தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருச்சி காவல் ஆணையர் கடந்த ஓராண்டில் 3400 குற்றவாளிகளை கைது செய்து உள்ளார் 250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளார். அதேபோல் உணவு பாதுகாப்பு துறையினர் கடந்த ஒரு வருடத்தில் 14,330 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 250 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர், மேலும் 1 கோடியே 31 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர். எந்த ஒரு சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமை ஆகிறதோ அந்த சமுதாயம் முற்றிலுமாக அழிந்துள்ளது என வரலாறு உள்ளது. ஒரு மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சியை அழிக்கக்கூடிய போதைப்பொருட்களை நிச்சயமாக அகற்ற வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் காமினி பேசுகையில்..... தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஒருபோதும் அடிமையாகக் கூடாது என்ற நோக்கத்தில் உறுதியாக உள்ளார். போதைப் புழக்கத்திற்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்தி எடுத்துச் செல்லும் பொறுப்பு நாம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே தான் நம்முடைய முதலமைச்சர் மாணவ சமுதாயத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வை முயற்சித்து வருகிறார்.
போதைப் பொருட்கள் எங்காவது புழக்கத்தில் இருந்தால் காவல்துறைக்கு கண்டிப்பாக தகவல் கொடுக்க வேண்டும். நம்முடைய சமுதாயம், மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து இந்த உறுதி மொழியை மனப்பூர்வமாக எடுத்திருந்தால் உங்கள் செல்போனில் டார்ச் அடித்து காண்பியுங்கள் என்று அனைத்து மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். உடனே மாணவ, மாணவிகள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக மொபைல் போனில் டார்ச் அடித்து காண்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து தந்தையர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுத்த சமுத்திரம் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision